புதுச்சேரி: தியோதர் டிராபி தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 354 ரன்கள் குவித்த இளம் வீரர் ரியான் பராக் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
தியோதர் டிராபி தொடரில் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தென் மண்டல வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய கிழக்கு மண்டல அணி வீரர் ரியான் பராக் 65 பந்துகளில் 95 ரன்கள் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் தியோதர் டிராபியில் மட்டும் இரு சதங்களை விளாசி ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக ரியான் பராக் அளித்த பேட்டியில், எனது பயிற்சியாளரிடம் கோப்பையை வெல்வோம் என்று கூறியிருக்கிறேன். ஏனென்றால் நான் நல்ல மனநிலையில், நல்ல ஃபார்மில் உள்ளேன். என்னை பற்றி ரசிகர்கள் என்னை நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. ஆனால் ஒருநாளும் பயிற்சியை மட்டும் நான் கைவிட்டதே இல்லை.
எல்லோரும் கிரிக்கெட் வீரரின் மகன் என்பதால் ஐபிஎல் ஆடுகிறேன் என்கிறார்கள். ஆனால் அசாம் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடிய முதல் வீரர் நான் தான். இன்னும் பல ஆண்டுகள் விளையாடப் போகிறேன் என்று கூறியிருந்தார். இளம் வீரர் ரியான் பராக் தனது பயிற்சியாளரிடம் என்ன கூறினாரோ, அதனை கிட்டத்தட்ட செய்து முடித்துள்ளார்.

ஏனென்றால் 72 ரன்களுக்கு கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமாக இருந்த நிலையில், ரியான் பராக் களமிறங்கினார். களம்புகுந்த முதல் ஓவரில் இருந்தே சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய அவர், 5 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 65 பந்துகளில் 95 ரன்கள் விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 5 போட்டிகளில் விளையாடி 354 ரன்களை குவித்த ரியான் பராக் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரியான் பராக் சிறப்பாக விளையாடி வருவதாக விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டராக ரியான் பராக் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.