2 சதம் அடித்தவருக்கு தொடர்நாயகன்.. 3 செஞ்சுரி அடித்த தினுஷாவுக்கு ஒண்ணுமில்லை.. ஏன் இப்படி?
கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தொடர்நாயகன் விருது வழங்கப்பட்ட விதம் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் படிக்கல் 3 இன்னிங்ஸ்களில் 2 சதங்களுடன் 328 ரன்கள் குவித்தார். ஆனால், இலங்கை ஆல்-ரவுண்டர் சோனல் தினுஷா 3 சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்த நிலையில், அவருக்கு விருது கொடுக்காதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடிய 4 இன்னிங்ஸ்களிலும் 50 ரன்களுக்கு மேல் குவித்த சோனல் தினுஷா, 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 420 ரன்கள் குவித்தார். அவர் முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ரன்களும், கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 103 மற்றும் ஆட்டமிழக்காமல் 133 ரன்களும் விளாசினார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த அவரது பேட்டிங் சராசரி 140 ஆகும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற தினுஷா, இலங்கையை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி போட்டியை டிரா செய்ய உதவினார்.
மறுபுறம், பந்துவீச்சில் இந்திய அணியின் இளம் வீரர் மானவ் சுதர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். சுதர் மற்றும் படிக்கல் ஆகிய இருவரின் செயல்பாடுகளை விடவும் சோனல் தினுஷாவின் ஆட்டம் சிறப்பாக இருந்த போதிலும், அவருக்குத் தொடர்நாயகன் விருது மறுக்கப்பட்டுள்ளது. "2 சதங்கள் அடித்த படிக்கலுக்குத் தொடர்நாயகன் விருது வழங்கும் போது, 3 சதங்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த தினுஷாவிற்கு ஏன் இந்த விருது வழங்கப்படவில்லை? இது ஒருதலைப்பட்சமான முடிவு" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

