For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை வென்ற பயிற்சியாளருக்கு எதிராக போராடிய இந்திய அணி வீரர்கள்.. 1997இல் நடந்தது என்ன?

மும்பை: இந்திய அணி பயிற்சியாளருக்கு எதிராக வீரர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி செய்த சம்பவம் ஒன்று சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் நடந்து இருக்கிறது. அது பற்றிய தகவல் ஒன்று தற்போது இந்திய அணி மேலாளரின் சுயசரிதையில் வெளியாகி உள்ளது. ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட், இப்போது கௌதம் கம்பீர் என கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைமை எப்போதும் இப்படியே இருந்ததில்லை. கிரெக் சேப்பல் காலத்துச் சர்ச்சைகளை விட, அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அணியின் அறையில் ஒரு பெரும் பூகம்பம் வெடித்தது.

அன்றைய தலைமைப் பயிற்சியாளரான மதன் லால், தனது சொந்த வீரர்களையே ஒரு பேட்டியில் கடுமையாக விமர்சிக்க, பதிலுக்கு வீரர்கள் அவருடன் பேசுவதையே நிறுத்தி, பனிப்போரை நடத்தினர். இந்த வீரர்கள் புரட்சி, இறுதியில் மதன் லாலின் பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள், பிசிசிஐயின் முன்னாள் மேலாளர் ரத்னாகர் ஷெட்டியின் சுயசரிதையான 'On Board-My Years in BCCI' என்ற புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

Players Boycotted the Coach in Indian Dressing Room in 1997 BCCI took Drastic Decision
Photo Credit: AI Generated

சர்ச்சையைத் தூண்டிய பேட்டி:

1997-ம் ஆண்டு, இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது, 1983 உலகக் கோப்பை நாயகர்களில் ஒருவரான மதன் லால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அந்தச் சமயத்தில், 'தி இந்து' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டிதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அந்தப் பேட்டியில், அணியில் இருந்த பல முன்னணி வீரர்கள் குறித்து மிகவும் வெளிப்படையான மற்றும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

அந்த அணியில் முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில், அஜய் ஜடேஜா, ராபின் சிங், சபா கரீம் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற, அந்தத் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த மற்ற வீரர்களை குறி வைத்து பயிற்சியாளர் மதன் லால் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

பேட்டி அளித்து விட்டு அதே வீரர்களை பார்க்க வேண்டும் என்பதை பற்றி கவலைப்படாமல் சரமாரியாக வார்த்தைகளை வீசி இருந்தார். அஜய் ஜடேஜா பற்றி, "அவர் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுகிறாரா அல்லது பந்துவீச்சாளராக விளையாடுகிறாரா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். ஒரு போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டு, அடுத்த ஐந்து போட்டிகளில் சொதப்பினால் ஆகாது." என்று கூறி இருந்தார்.

அடுத்து ராபின் சிங் பற்றி, "கடினமாக முயற்சிக்கும் ஒரு கிரிக்கெட் வீரர், ஆனால் அவரை ஒரு சர்வதேசத் தரத்திலான ஆல்-ரவுண்டர் என்று வகைப்படுத்த முடியாது." என்று கூறி இருந்தார் மதன் லால். விக்கெட் கீப்பர் சபா கரீம் பற்றி, "அவர் ஒரு சராசரி விக்கெட் கீப்பர். தனது பேட்டிங்கால் ஒரு போட்டியை வென்று தர முடியாது." என்று மோசமாக விமர்சித்து இருந்தார்.

அப்போது இந்திய அணியின் நம்பிக்கை மிக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகிக் கொண்டு இருந்த அனில் கும்ப்ளே பற்றி, "கும்ப்ளேவின் பந்துவீச்சில் எனக்குத் திருப்தியில்லை. அவர் பந்தை திருப்புவதில் (Turn) கவனம் செலுத்துவதை விட, லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்த வேண்டும்." என்று கூறினார்.

மேலும் இந்திய அணியின் அப்போதைய தோல்விகள் பற்றி பேசுகையில், "நாம் வெற்றி பெறவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் மட்டும் தனியாக என்ன செய்ய முடியும்?" என்று ஆதங்கத்துடன் அந்தப் பேட்டியை முடித்திருந்தார் மதன் லால்.

உடைமாற்றும் அறையில் வெடித்த புரட்சி:

பயிற்சியாளரின் இந்தப் பேட்டி, இந்திய அணிக்குள்ளும், கிரிக்கெட் வாரியத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக, அன்றைய அணி மேலாளரான ரத்னாகர் ஷெட்டி, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மதன் லால் இந்த பேட்டியை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்ததை உறுதி செய்தார்.

இதையடுத்து, உடைமாற்றும் அறைக்குள் ஒரு புரட்சி வெடித்தது. வீரர்கள் அனைவரும் பல நாட்களுக்குப் பயிற்சியாளர் மதன் லாலுடன் பேசுவதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதனால், இந்திய அணிக்குள் ஒருவித இறுக்கமான, அசௌகரியமான சூழல் நிலவியது.

பேட்டால் பதிலடி கொடுத்த வீரர்:

அப்போது நடந்த இலங்கை ஒருநாள் தொடரின் போட்டி ஒன்றில், மதன் லாலால் விமர்சிக்கப்பட்ட வீரர் ஒருவர் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும்போது, அவர் தனது பேட்டின் கைப்பிடியை பத்திரிகையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கிக் காட்டியுள்ளார். இது, தனது விமர்சனத்திற்கு பேட்டால் பதிலடி கொடுப்பதாகவும், பயிற்சியாளருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவாலாகவும் பார்க்கப்பட்டது.

அந்தப் போட்டியில் முகமது அசாருதீன் மற்றும் அஜய் ஜடேஜா ஆகிய இருவரும் சதம் அடித்திருந்தனர். அவர்களில் யார் இந்தச் செய்கையைச் செய்தார் என்பதை ரத்னாகர் ஷெட்டி தனது புத்தகத்தில் குறிப்பிடவில்லை.

பறிபோன பதவி:

இந்தச் சர்ச்சைகள் வெடித்த சில மாதங்களிலேயே, மதன் லால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அன்ஷுமன் கெய்க்வாட் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சர்ச்சைகள் நிறைந்த ஒரு குறுகிய காலப் பயிற்சியாளர் பதவிக்காலம் என வர்ணிக்கப்படும் மதன் லாலின் 10 மாத காலப் பணி, இத்துடன் முடிவுக்கு வந்தது. கிரெக் சேப்பலுக்கு முன்பே இந்திய அணியில் மோசமான பயிற்சியாளர் இருந்துள்ளார் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தி உள்ளது.

Story first published: Wednesday, October 29, 2025, 22:18 [IST]
Other articles published on Oct 29, 2025
English summary
Players Boycotted the Coach in Indian Dressing Room in 1997; BCCI took Drastic Decision
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+