கொரோனா பாதித்தால்.. தனி ஃபிளைட் கிடையாது.. இங்கிலாந்து டூரை மறந்துடுங்க - பிசிசிஐ கெடுபுடி
மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு, இந்திய வீரர்களில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வீரர் அந்த தொடரையே மறந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

18 நாட்கள் தனிமை
இந்த தொடருக்காக, இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பு, வரும் மே 25 முதல் இந்திய வீரர்கள் அனைவரும் பயோ-பபுளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அவர்கள் 8 நாட்கள் கடுமையாக தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள். இந்த தனிமைப்படுத்துதலின் போது 3 நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள். அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தொடரை மறந்துடலாம்
இந்த நிலையில், இந்திய வீரர்களில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர் இந்த இங்கிலாந்து தொடரை மறந்துவிட வேண்டியது தான் பிசிசிஐ கூறியிருப்பதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியில், "வீரர்கள் மும்பைக்கு வரும் வரை தங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் என்றும், ஒருவேளை மும்பையில் நடத்தப்படும் சோதனையில் சம்பந்தப்பட்ட வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்று தனி விமானம் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. அவர்கள் தங்களுடைய இங்கிலாந்து பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளலாம்" என்று கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இரண்டு முறை நெகட்டிவ்
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்கு இங்கிலாந்தில் இருக்கும் அளவுக்கு லாங் சீரிஸ் என்பதால், வீரர்கள் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மும்பைக்கு புறப்படுவதற்கு முன்பு வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும். மும்பையில் தரையிறங்கியதும், அவர்கள் ஹோட்டலுக்கு செல்வதற்கு முன்பு மற்றொரு சோதனை நடத்தப்படும். மும்பைக்கு செல்வதற்கு முன்பே, வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்ஸ், குடும்பத்தினர் என அனைவருக்கும் நடத்தப்படும் சோதனையில், இரண்டு முறை 'நெகட்டிவ்' ரிசல்ட்டே வர வேண்டுமாம். அப்போதுதான் அவர் பயோ-பபிளில் எந்தவித பாதிப்பு இன்றி நுழைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ்
மும்பைக்கு காரிலோ அல்லது விமானத்திலோ வீரர்கள் வந்து சேரலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்பு, இந்திய வீரர்கள் அனைவரும் Covishield கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு, இங்கிலாந்து சென்று இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வார்கள் என்று தெரிகிறது. அப்படி அங்கு அனுமதி கிடைக்கவில்லை எனில், இந்தியாவிலேயே 2வது டோஸ் போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications