சந்தோஷம்தான்.. ஆனாலும் லேசா சில "கறை" இருக்கு.. அதை சரி செய்யனும்.. டோணி
மிர்பூர்: 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றது சந்தோஷம் அளிப்பதாக இருந்தாலும் அணியில் பல விஷயங்களை நாம் சரிப்படுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று தொடரை இழந்து பெரும் அவமானத்தைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கு வங்கதேசத்தின் சிறப்பான ஆட்டம் காரணமாக கூறப்பட்டாலும் கூட இந்திய அணியில் கோஹ்லி ஆதரவாளர்கள், டோணிக்கு சிக்கலை ஏற்படுத்த சரிவர ஆடவில்லை என்ற பரபரப்பும் கிளம்பியது.
இந்த நிலையில் நேற்று நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றது. கோஹ்லி வழக்கம் போல குச்சியைக் காட்டி விட்டுச் சென்று விட்டார். ஆனால் டோணி, ஷிகர் தவான், ரெய்னா உள்ளிட்டோர் பொறுப்பாக ஆடி அணியை கரை சேர்த்தனர்.
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டோணி அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து...

மொத்தமாக ஆடினோம்
அணியினர் அனைவரும் சேர்ந்து உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளோம். இது மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும் சில விஷயங்களில் நாம் முன்னேற்றத்தை செய்ய வேண்டியுள்ளது.

பந்து வீச்சில் கவனம் தேவை
நமக்கு உண்மையிலேயே அதி வேகமான பவுலர்கள் தேவையா அல்லது அதி வேகமாக வீசாத பவுலர்கள் தேவையா அல்லது சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசும் பவுலர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

பங்கா பெஸ்ட்தான்
வங்கதேச வீரர்கள் நல்ல அணியினர். சிறந்த திறமையுடன் உள்ளனர். நிலைத்து ஆடுகின்றனர். சிறந்த அணிகளில் ஒன்றாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது.

ரன் குவிச்சா போதும்
ஸ்கோர்போர்டில் ரன் குவிய வேண்டும். அப்போதுதான் அதை டிபன்ட் செய்ய முடியும். அதைத்தான் நாங்கள் இன்று செய்தோம். பந்து வீச்சாளர்களையும் அது இயல்பாக பந்து வீச வைக்கும். அவர்களுக்கு வேலை எளிதாகும் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications