சா பாலோ: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியை காண வருமாறு பிரமதர் நரேந்திர மோடிக்கு போட்டியை நடத்தும் நாடான பிரேசிலின் அதிபர் டில்மா ரூசஃப் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரேசிலில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டி வரும் ஜூலை மாதம் 13ம் தேதி நடைபெறும். இந்த இறுதிப் போட்டியை காண வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் டில்மா ரூசஃப் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை வடகிழக்கு பிரேசிலில் உள்ள போர்டலெசா நகரில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்கிறார்கள்.
அவர்கள் முன்கூட்டியே பிரேசில் சென்று ஃபீஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை காண உள்ளனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 6வது மாநாடு மார்ச் மாதமே நடப்பதாக இருந்தது. ஆனால் கால்பந்தாட்ட பிரியரான சீன அதிபரின் வேண்டுகோளை ஏற்று மாநாடு தேதி தள்ளிப்போடப்பட்டது. அதாவது மாநாட்டுக்காக பிரேசில் வந்து கால்பந்தாட்டத்தை பார்க்க சீன அதிபர் விரும்பியுள்ளார்.
ஃபீஃபா உலகக் கோப்பை 2014 நினைவு அஞ்சல் தலையை மோடி கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.