Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்க மகள்.. "சோகமோ, மகிழ்ச்சியோ எனக்கு கிரவுண்ட் தான் எல்லாமே" போல் வால்ட் வீராங்கனை பவித்ரா பேட்டி

டெல்லி: 2025 தேசிய விளையாட்டுத் தொடரில் தமிழகத்தை சேர்ந்த பவித்ரா வெங்கடேஷ் போல் வால்ட் (Pole Vault)விளையாட்டில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். அவர் 3.95 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்று இருக்கிறார்.

தங்கம் வென்ற பின் பவித்ரா வெங்கடேஷ் மைகேல் (myKhel) தளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் இந்தியாவுக்கு மகளிர் போல் வால்ட் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்து இருந்தார். அந்த அனுபவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

Pole Vault Champion Pavithra Venkatesh shares her experience after winning at National games 2025

அதற்கு பதில் அளித்த பவித்ரா, "2022-ல் நடக்க வேண்டிய ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடந்தது. அது எனக்கு பயிற்சி செய்ய உதவியது. என்னுடைய பயிற்சியாளர் உடன் வந்திருந்தால் என்னால் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும்."

"பயிற்சியாளர் வருவேன் என கூறி இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு விசாகிடைக்காததால் வர முடியவில்லை. அவர் வந்திருந்தால் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். ஆசிய விளையாட்டை பொறுத்தவரை, ஒரு சர்வதேச விளையாட்டு தொடர் எப்படி இருக்கும் என்பது அங்கு சென்ற பிறகு தான் எனக்கு தெரிந்தது."

"நான் கிளம்பும் முன் தகவல்களை தெரிந்து கொண்டு தான் சென்றேன். ஆனால், அங்கு இருந்த சூழ்நிலை வேறு மாதிரியாக, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. ஒலிம்பிக்கில் அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு இருந்தது" என்றார்.

இந்த ஆண்டு உங்களின் திட்டம் என்ன? இந்த விளையாட்டை தாண்டி உங்களின் ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்தார் பவித்ரா. "இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டி உள்ளது. மே மாதம் மற்றொரு ஆசிய அளவிலான தகுதிப் போட்டி உள்ளது. இந்த ஆண்டில் அதற்காக தான் பயிற்சி செய்து வருகிறேன். இந்த ஆண்டு அது மட்டுமே சர்வதேச போட்டிகள் என்பதால் அதில் கவனம் செலுத்துகிறேன்."

"போல் வால்ட் இல்லாத நேரங்களில் நான் என்ன செய்தாலும் எனக்கு கடைசியில் மைதானம் தான் எல்லாமே. நான் சோகமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும் சரி, மைதானத்தில் அமர்ந்து வேடிக்கையாவது பார்க்க வேண்டும். அவ்வளவு தான். போல் வால்ட் இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று கேட்டால் எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. நான் எப்போதும் மைதானத்தில் இருக்க வேண்டும். எனது பயிற்சியாளருடன் பேச வேண்டும். எனக்கு மைதானம் தான் எல்லாமே" என்றார் பவித்ரா.

தமிழ்நாட்டில் இருந்து வரும் இளம் வீராங்கனைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன? என்று கேட்ட போது, "போல் வால்ட் விளையாட்டில் இதற்கு முன் 2.50 மீட்டர், 3 மீட்டர் தான் தாண்டினார்கள். ஒருவர் 4 மீட்டர் தாண்டிய பின் இப்போது எல்லோரும் 4 மீட்டர் தாண்ட துவங்கி விட்டனர். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஆண்கள் செய்வதை பெண்கள் செய்ய முடியாது என நினைக்கிறார்கள். நான் தவறாக சொல்லவில்லை. எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியும். யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது."

"யாரால் என்ன பண்ண முடியும், முடியாது என உங்களாலும், என்னாலும் சொல்ல முடியாதுள் கடவுளால் தான் சொல்ல முடியும். பலரும் நம்மை தாழ்த்தி பேசுவார்கள். உன்னால் இதை செய்ய முடியாது என்பார்கள். உனக்கு ஆதரவு குறைவாகவே கிடைக்கும். இங்கு அரசியல் இருக்கிறது என்பார்கள். அதை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. மனதில் குறிக்கோள் இருந்தால், அதை செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும்."

"நான் போல் வால்ட் விளையாட துவங்கிய போது என்னாலும் இதை செய்ய முடியாது என்றார்கள். நான் உயரம் குறைவாக இருப்பதாக சொன்னார்கள். நான் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் என்னை நம்பினேன். கடவுளை நம்பினேன். எனது பயிற்சியாளரை நம்பினேன். நான் என்ன யோசிக்கிறேனோ அதுதான் நடக்கும். கடவுள் உடன் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்." என்றார் பவித்ரா

கடைசியாக தேசிய விளையாட்டுப் தொடரில் தங்கம் வென்று இருக்கிறீர்கள். இப்போது இந்த வெற்றியை எப்படி கொண்டாடப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, "நான் இப்போது கொண்டாடப் போவதில்லை. ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பின் தான் கொண்டாடுவேன். இங்கு சிக்கலான சூழ்நிலையிலும் நான் தங்கம் வென்றேன், அருகே கோவில் இருந்தால் கடவுளுக்கு நன்றி கூறி விட்டு அடுத்த தொடருக்கு தயாராகப் போகிறேன்" என்று முடித்தார் பவித்ரா வெங்கடேஷ்.

Story first published: Wednesday, February 12, 2025, 10:21 [IST]
Other articles published on Feb 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+