ராதாவுக்கு பிரஷர்.. ஷெபாலிக்கு பயமே இல்லை.. கூல் செய்த ஹிர்வானி.. கப்புக்கு நாங்க ரெடி.. பூனம்!
டெல்லி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியுடன் மோதி வீழ்ந்த சோகத்தை இந்திய அணி மறக்கத் தொடங்கி விட்டது. அடுத்து 2021ல் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தயாராகி வருகிறோம். அந்த கோப்பைதான் இப்போது எங்களது லட்சியம் என்று பூனம் யாதவ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஷெபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ் என அதிரடி காட்டி விட்டனர் நமது மகளிர். இறுதிப் போட்டியில்தான் அவர்கள் பெரிய அளவில் சொதப்பினர். இது மட்டுமே நமக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது.
குட்டி குட்டி பிள்ளைகளுடன் போன இந்திய அணி இந்த அளவுக்கு வந்ததே முதலில் பெரிய சாதனைதான். முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வேறு முன்னேறி அசத்தினர் இந்திய மகளிர் அணி.

இப்போதே தயாராகி வருகிறோம்
இந்த நிலையில் தற்போது 2021 ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு மனதளவில் தயாராக ஆரம்பித்து விட்டது இந்திய மகளிர் அணி. இந்தப் போட்டி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் பூனம் யாதவ். இவர் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு போவாரா என்பதே முதலில் சந்தேகமாக இருந்தது. காரணம் விரலில் ஏற்பட்ட காயம். ஆனால் இவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வாளர்கள் அனுப்பி வைத்தனர். அதை அவர் வீண் செய்யவில்லை.

ஆஸ்திரேலியாவை பந்து வீச்சால் மிரட்டிய பூனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பூனம் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக 10 விக்கெட்களை இந்த தொடரில் அவர் சாய்த்தார். ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டவமானது. இந்த நிலையில் கண்டிப்பாக 2021 உலகக் கோப்பையை வெல்வோம் என்று பூனம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அந்த கோப்பைதான் இப்போது எங்களது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நரேந்திர ஹிர்வானி பலம் சேர்த்தார்
டி20 உலக கோப்பைப் போட்டியில் நரேந்திர ஹிர்வானி எங்களுக்குப் பந்து வீச்சு பயிற்சியாளராக வந்திருந்தார். அது நல்ல அனுபவமாக இருந்தது. நிறைய உதவிகள் செய்தார் என்று ஒரு பேட்டியில் பூனம் யாதவ் கூறியுள்ளார். ஹிர்வானி நிறைய பேசினார். அட்வைஸ் கொடுத்தார். டிப்ஸ் கொடுத்தார். எப்படி விளையாட வேண்டும் என்பதை விளக்கினார். ராதாவுக்கு நிறைய உதவிகள் செய்தார். நான் எப்போதெல்லாம் தவறு செய்தேனோ அப்போதெல்லாம் பொறுமையாக விளக்கி சரி செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

ராதா பதட்டத்தை தணித்த ஹிர்வானி
ராதா தான் இருப்பதிலேயே மிகவும் இளம் வயது. இதனால் எப்போதுமே பதட்டமாக இருந்தார். அவரை ஹிர்வானி சார்தான் ஊக்கமளித்து பதட்டத்தைக் குறைத்து சரியான ரிதமுக்கு கொண்டு வந்தார். அவர் எங்களுடன் இருந்தது பெரும் பலமாக உதவியாக இருந்தது என்றும் பூனம் கூறினார். அணியின் இன்னொரு பலம் ஷெபாலி வர்மா. அவரைப் போன்ற திறமையான வீராங்கனை இருப்பது அணிக்கு நிச்சயம் பெரும் பலம்தான் என்றும் பெருமை தெரிவித்தார்.

ஷெபாலி யாதவுக்கு பயமே கிடையாது
ஷெபாலிக்கு பயம் என்பதே கிடையாது. அருமையாக அடித்து ஆடக் கூடியவர். எப்படி ரன்கள் எடுப்பது என்பதை விட எப்படி அணியை வெற்றி பெற வைப்பது என்பதுதான் அவரது ஒரே கவலையாக இருந்தது. எனவே அனுபவித்து ஆடினார். முதல் போட்டியிலேயே அவர் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். நீங்க கூக்ளி போடுங்க நிச்சயம் விக்கெட் வரும் என்று எனக்கு டிப்ஸ் கொடுக்கவும் செய்தார். நல்ல பொண்ணும் கூட என்று கூறினார் பூனம்.

2021 கோப்பை இலட்சியம்
எங்களது அடுத்த இலக்கு 2021 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை. அதுதான் லட்சியம். அதற்கான தயார் நிலைக்கு நாங்கள் மாறத் தொடங்கி விட்டோம். தற்போது கொரோனா வைரஸ் பதட்டம் காரணமாக அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயிற்சியை வீட்டிலேயே தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களுக்குள் தயாராகி வருகிறோம். நிலைமை சரியானதும் தீவிரப் பயிற்சிகள் தொடங்கும். கப்பு முக்கியம்.. அதை உணர்ந்துள்ளோம். நிச்சயம் வெல்வோம் என்றார் பூனம்.


Click it and Unblock the Notifications