மும்பை : கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தொடர் என்றால் அது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடர் இம்முறை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெறுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் இதில் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான படையினர் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனினும் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார் இருக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கே இன்னும் பதில் வரவில்லை. இதனை தீர்மானிக்க இந்திய அணி நிறைய ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் இந்திய அணியோ ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி என மொத்தமே எட்டு போட்டிகளில் தான் விளையாட இருக்கிறது.
இதன்பிறகு உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் என அனைத்தையும் சேர்த்தால் பத்து ஆட்டங்கள் தான் இருக்கிறது. இந்த 10 ஆட்டங்களை வைத்து தான் இந்திய அணி தாங்கள் எந்த மாதிரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்யப் போகிறோம் என்பது தீர்மானிக்க வேண்டும்.
இந்த நிலையில் உலககோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பு இந்திய அணி ஒரு மாதம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 டி20 போட்டிகளும் அயர்லாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் என இந்திய அணி ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எட்டு டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இது மோசமான பிளேனிங் என கிரிக்கெட் விமர்சகர்களும் சாடி இருக்கிறார்கள். ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பு டி20 போட்டிகளில் விளையாடுவது எந்த அளவு சரியானதாக இருக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு மாதம் முழுவதும் இந்திய அணி வீணடித்திருப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பு டி20 போட்டிகள் விளையாடுவதற்கு பதிலாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளுக்கு தான் அதிக வருமானம் கிடைப்பதால் காசுக்காக இப்படி செய்து விட்டார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.