ஆஸ்திரேலியாவுக்கு பொங்கல் வைக்குமா இந்தியா.. நாளை 2வது ஒருநாள் போட்டி
பிரிஸ்பேன்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 309 ரன் குவித்தும் தோல்வியை தழுவியதால், இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்கப்படுமா என்று இந்திய ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் பிட்சில் பேட்டிங்கில் சாதித்து அசத்தியது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 171 ரன் குவித்தார். கோஹ்லி 91 ரன்கள் குவித்து நம்பிக்கையளித்துள்ளார்.
ஆனால், ஆஸ்திரேலிய பவுலிங்கை போலவே இந்திய பவுலிங்கும் எடுபடாமல் போனது. எனவே 2வது மேட்சின்போது, இந்திய அணி, தனது பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

சுருண்ட சுழல்பந்து
சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ரவிந்திர ஜடேஜா எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மிடில் ஓவர்களில் இவ்விரு ஸ்பின்னர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.

பரிந்தர் அபாரம்
வேகப்பந்து வீச்சில் புதுமுக வீரர் பரிந்தர் ஸ்ரன் நம்பிக்கை தருகிறார். தனது முதல் சர்வதேச ஆட்டமான பெர்த் ஒருநாள் போட்டியில், அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். காயம் அடைந்த இஷாந்த் சர்மா இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது கேள்விக் குறியே.

வலுவான பேட்டிங்
பெர்த் ஆட்டத்தை போலவே இந்தப்போட்டியிலும் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கைபோலவே ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பெய்லி, ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், பால்க்னெர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

ஆஸி. அணியில் மாற்றம்
மிச்சேல் மார்ஷ், வார்னர் ஆகியோருக்கு பதிலாக ஹாஸ்டிங்ஸ், உஸ்மான் குவாஜா ஆகியோர் நாளைய போட்டியில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.

போட்டி நேரம்
ஆஸ்திரேலிய நேரப்படி பகல்-இரவு ஆட்டமான, நாளைய போட்டி, இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications