விஸ்வரூப இலங்கையை வீழ்த்துமா ஆவேச ஆஸ்திரேலியா..? சிட்னியில் நாளை பலப் பரிட்சை!
சிட்னி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலியா-இலங்கை நடுவேயான போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
குரூப் ஏ பிரிவில் 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து காலிறுதிக்கு முதலிலேயே தகுதி பெற்று, சீட்டில் துண்டு போட்டு வைத்துவிட்டது. மூன்று வெற்றிகளுடன் இலங்கை, கம்பீரமாக விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கிறது. ஆஸ்திரேலியாவோ 2 வெற்றிகளுடன், அடுத்த வெற்றிக்காக குறிபார்த்து நிற்கிறது.எனவே இவ்விரு அணிகளும் மோதும் போட்டி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை விஸ்வரூபம்
இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்துடன் தோற்ற நிலையை பார்த்தால், அந்த அணி அவ்வளவுதான் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் இலங்கை தான் ஒரு முன்னாள் சாம்பியன் என்பதை நிரூபித்து, அடுத்தடுத்த 3 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.

அனாயாச வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய கடைசி போட்டி இலங்கையின் தன்னம்பிக்கைக்கு, பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் என அனைத்தையும் கொடுத்திருக்கும். ஏனெனில், 310 ரன்களை துரத்திச் சென்ற இலங்கை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 47.2 ஓவர்களிலேயே வெற்றி பெற்று அசத்தியது.

பேட்ஸ்மேன்கள்
இலங்கையின் தொடக்க வீரர் திரிமன்னே, குமார் சங்ககாரா ஆகியோர் சதம் அடித்து தங்களது ஃபார்மை நிரூபித்தனர். நடப்பு உலக கோப்பையின் ரன் குவிப்பில், டாப் 10 பேட்ஸ்மேன்களில், இவர்கள் இருவருமே உள்ளனர்.

தடுமாறிய ஆஸி.
அதே நேரம், ஆஸ்திரேலியாவோ, நான்கில் இரு போட்டிகளில்தான் வென்றுள்ளது. நியூசிலாந்திடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், வங்கதேசத்துடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் ஆப்கனுக்கு எதிராக கடந்த போட்டியில் ஆஸி. பெற்ற 275 ரன்கள் வித்தியாச வெற்றி, நாங்கள் இன்னமும், புலிபோல சீறிக் கொண்டுதான் உள்ளோம் என்பதை புடம் போட்டு காட்டிவிட்டது.

சம பலம்
எனவே சம பலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் நாளைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு சிட்னி கிரிக்கெட் கிரவுண்டில் தொடங்குகிறது. இந்த மைதானம், முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications