உலக கோப்பை டி20: இந்தியா-வங்கதேசம் நாளை மோதல்.. தவானுக்கு பதில் ரஹானேவுக்கு வாய்ப்பு
பெங்களூர்: உலக கோப்பை டி20 கிரிக்கெட்டின் நாளைய சூப்பர்-10 ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. தொடர்ந்து சொதப்பும் தவானுக்கு பதிலாக, இந்த போட்டியில், அஜிங்ய ரஹானே களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
சூப்பர்-10 சுற்றில் முதல் போட்டியில் நியூசிலாந்திடம், இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. இருப்பினும் 2வது போட்டியில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ செய்து அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்து ஏறத்தாழ, அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு முக்கியம்
இந்தியாவை பொறுத்தளவில் வங்கதேசத்தையும், அதற்கு அடுத்தாற்போல, ஆஸ்திரேலியாவையும் கண்டிப்பாக வீழ்த்தினால்தான், அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கவனத்தோடு களமிறங்க உள்ளது.

பேட்டிங் சொர்க்கம்
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும், போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த மைதானம் பேட்டிங்கின் சொர்க்கபுரி என்பதால், இந்தியா ரன் குவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சொதப்பல்ஸ் ஆப் இந்தியா
இந்திய அணியை பொறுத்தளவில், பவுலிங் சிறப்பாக இருந்தபோதிலும், தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் ரெய்னா ஆகியோரின் பேட்டிங் கவலைக்குரிய வகையில் உள்ளது.

ரஹானேவுக்கு வாய்ப்பு
எனவே, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தவானை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அஜிங்ய ரஹானே களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பாண்ட்யாவுக்கு பதிலாக ஹர்பஜன்சிங்கை களமிறக்கவும் திட்டமுள்ளதாக தெரிகிறது.

கோஹ்லி மீது எதிர்பார்ப்பு
யுவராஜ்சிங், கோஹ்லி மற்றும் டோணி ஆகியோர் மட்டுமே இத்தொடரில் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். அதிலும் கோஹ்லி மீதுதான் இந்திய அணி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

வங்கதேசம் பலவீனம்
வங்கதேசத்தை பொறுத்தளவில் டஸ்கின் மற்றும் சன்னி அராபத் ஆகியோர் சர்ச்சைக்குறிய பந்து வீச்சு காரணமாக விளையாட முடியாதது பந்து வீச்சை பதம் பார்த்துள்ளது. எனவே பல் பிடுங்கிய பாம்பாகத்தான் வங்கதேச பந்து வீச்சு உள்ளது.

ஆட்டத்தில் அனல்
இரு அணிகளுக்குமே இது முக்கிய போட்டி என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரை பொறுத்தளவில் வானம் தெளிவாக இருக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications