வயது முறைகேடு காரணமாக பிசிசிஐயால் தடை வாங்கிய வீரர், இன்று இந்திய அணியில்.. கடின உழைப்பால் வெற்றி
டெல்லி: டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கி, வயதுப் பிரச்சினை காரணமாக தடையைச் சந்தித்து, இன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளது, அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பிரின்ஸ் யாதவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அருகே உள்ள தரியாபூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவுக்கு கிரிக்கெட் கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை. கிரிக்கெட் மீது அவர் வைத்திருந்த ஆர்வத்தைப் பார்த்து அவரது தந்தையான ஓய்வு பெற்ற ரயில்வே போலீஸ் அதிகாரி ராம் நிவாஸ் மிகவும் கவலைப்பட்டார். மகனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவரை அரசு வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தினார்.
தந்தைக்காக டெல்லி போலீஸ் வேலைக்கான உடற்தகுதித் தேர்வில் பாஸான பிரின்ஸ், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே எழுத்துத் தேர்வை எழுதாமல் தவிர்த்தார். ஆனாலும், அவரது அம்மா சந்தோஷின் ஆதரவோடு தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால், பிரின்ஸ் தனது 18 வயது வரை லெதர் பந்தை தொட்டதே இல்லை.
நஜாப்கர் பகுதியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே வேகமாகப் பந்து வீசி வந்தார். அப்போது அவரது வாழ்க்கையை மாற்றியது பயிற்சியாளர் அமித் வசிஷ்டா உடனான சந்திப்பு தான். டென்னிஸ் பந்தில் பிரின்ஸ் வீசிய துல்லியமான யார்க்கர்களைப் பார்த்து வியந்த அமித், உடனே அவருக்கு முறையான பயிற்சியைக் கொடுக்கத் தொடங்கினார். 18 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதால் மற்றவர்களை விட இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று அவரது பயிற்சியாளர் கூறினார்.
ஆனால், 2019-ல் டெல்லி அண்டர்-19 அணியில் விளையாடத் தனது வயதைக் குறைத்துக் காட்டியதாக பிசிசிஐ (BCCI) அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. இந்தத் தடை அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பெரிய சவாலாக மாறியது. தடைக்குப் பிறகு மீண்டும் மைதானத்திற்குத் திரும்பிய பிரின்ஸ் யாதவ், நெட் பௌலராக தனது பயணத்தைத் தொடங்கினார். 2024 உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் விஜய் ஹசாரே தொடரில் 18 விக்கெட்டுகளையும், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் புரானி டெல்லி-6 அணிக்காக 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்தச் சிறந்த ஆட்டத்தால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 2026 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக, விராட் கோலி முன்பு கொடுத்த அட்வைஸ் படியே, ஒரு துல்லியமான இன்ஸ்விங்கர் பந்து மூலம் அவரையே டக் அவுட் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தச் சிறந்த ஆட்டத்தால் அவருக்கு இந்திய அணியில் உடனடியாக இடம் கிடைத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளையும், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டிலும் பிரின்ஸ் யாதவ் தன் திறமையை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

