ஒன்றரை மாதத்தில் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கப் போகும் பிரின்ஸ் யாதவ்.. ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன தகவல்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் ஒரு மோசமான செய்தி கிடைத்துள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் காயம் காரணமாக தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான பிரின்ஸ் யாதவ் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தி நம்பிக்கை அளித்து இருந்தார்.
இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்களையும், 6 டி20 போட்டிகளில் 9 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், சர்வதேச அறிமுகம் பெற்ற ஒன்றரை மாதத்திற்குள் காயத்தில் சிக்கி இருக்கிறார். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 3வது மற்றும் கடைசி போட்டியில் அணியில் மாற்றங்கள் இருக்கும் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஹராரேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பிரின்ஸ் யாதவ் மிகவும் துல்லியமாக பந்துவீசி ஜிம்பாப்வே அணியின் 2 விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே வீழ்த்தினார். ஆனால், தனது 2வது ஓவரின் 2வது பந்தை வீசிய போது, அவரது இடது காலில் திடீரென கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர், மேற்கொண்டு பந்துவீச முடியாமல் உடனடியாக மருத்துவக் குழுவினருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
போட்டி முடிந்த பிறகு பிரின்ஸ் யாதவின் காயம் குறித்துப் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "துரதிர்ஷ்டவசமாக நமது அணியின் முக்கிய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். பிரின்ஸ் யாதவின் இந்த காயம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் 81 ரன்கள் மற்றும் திலக் வர்மாவின் 60 ரன்கள் உதவியுடன் 219 ரன்கள் குவித்தது. 220 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தபோதிலும், அந்த அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் யாஷ் தாக்குர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. காயம் அடைந்துள்ள பிரின்ஸ் யாதவிற்குப் பதிலாக கடைசி போட்டியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

