முடியல சாமி! இருமல் மருந்து குடிச்சது குத்தமா? இங்கிலாந்து கிளம்பிய ப்ரித்வி ஷா! என்ன தான் நடக்குது?
மும்பை : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பிசிசிஐ இந்த விவகாரத்தை அணுகிய விதம் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ப்ரித்வி ஷா மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் இங்கிலாந்து கிளம்பிச் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இளம் வீரர் ஒருவரின் கிரிக்கெட் வாழ்க்கை பலராலும் பந்தாடப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையில் அவரது பங்கு என்ன என்பதும் மர்மமாகவே உள்ளது.

எட்டு மாத தடை
கடந்த சில வாரங்கள் முன்பு ப்ரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறி எட்டு மாதங்கள் தடை விதித்தது பிசிசிஐ. அப்போது இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என புகழப்பட்ட ஒரு இளம் வீரர் திடீரென ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி தடை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?
இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ அவர் ஜலதோஷத்துக்கு இருமல் மருந்து எடுத்துக் கொண்டார். அதில் தடை செய்யப்பட்ட ஒரு ஊக்கமருந்து இருந்துள்ளது. அது தான் சிக்கலுக்கு காரணம் எனக் கூறி இந்த விவகாரத்தை சாதாரண விஷயமாக மாற்றியது.

மர்ம முடிச்சுக்கள்
ஆனால், அதன் பின் பலரும் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து கேள்வி எழுப்ப துவங்கினர். ப்ரித்வி ஷாவுக்கு எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது? எப்போது விசாரணை நடந்தது? ஏன் சுமார் இரண்டு மாத காலம் தாமதித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது? என கேட்டு வருகின்றனர்.

ஆதரவும் உண்டு
அதே சமயம், திலிப் வெங்க்சர்க்கார் உள்ளிட்ட சிலர் இந்த தடை தேவை இல்லாதது என ப்ரித்வி ஷாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே ப்ரித்வி ஷாவை குறி வைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இங்கிலாந்து சென்றார்
இந்த சர்ச்சைகளால் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படும் ப்ரித்வி ஷா தன் சொந்த செலவில் இங்கிலாந்து கிளம்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டால் போதும் என்ற மனநிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது.

என்ன நடக்கிறது?
பிசிசிஐ சமீபத்தில் ப்ரித்வி ஷா விவகாரத்தில் என்ன நடந்தது? தாங்கள் என்ன செய்தோம்? என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இரண்டு மாத காலம் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications