“தவறான நண்பர்களுடன் சேர்ந்தேன்.. குடும்பத்தில் பிரச்சனை..” உண்மையை ஒப்புக் கொண்ட பிரித்வி ஷா
மும்பை: இந்திய அணியில் தனது வாய்ப்பை இழந்த பிரித்வி ஷா, தவறான நண்பர்களுடன் சேர்ந்து கவனம் இழந்ததால் தனது கிரிக்கெட் வாழ்வு சரிவை சந்தித்ததாக கூறி உள்ளார். சமீபத்தில் தனது உள்நாட்டு அணியான மும்பையை விட்டு விலக முடிவு செய்திருந்தார் பிரித்வி ஷா. அந்த அணியில் இருந்து விலகி வேறு மாநில அணிக்கு விளையாடுவதற்கு அவர் தடையில்லா சான்றிதழ் (NOC) கோரியிருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் தான் செய்த தவறுகளை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தான் தவறான நண்பர்களுடன் சேர்ந்ததாகவும், முன்பை விட அதிக நேரம் பயிற்சி செய்வதில்லை எனவும் அவராகவே உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் மீது இருந்த விமர்சனங்களை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது பற்றி பிரித்வி ஷா பேசியதாவது: "நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. மக்களின் பார்வைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் மட்டுமே என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நான் எனது வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன். கிரிக்கெட்டுக்கு குறைந்த நேரமே அளித்தேன். நான் இதற்கு முன் தினமும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பேட்டிங் செய்வேன். எப்போதும் சோர்வடையவே மாட்டேன். எனது பாதி நாள் மைதானத்தில் தான் இருக்கும். 2023 வரை நான் இப்படித்தான் இருந்தேன்.
ஆனால், அதன் பிறகு முக்கியமில்லாத விஷயங்களை நான் முக்கியமாக எடுத்துக்கொண்டேன். தவறான நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். நான் உச்சத்தில் இருந்தேன். அப்போது சில நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் இங்கேயும் அங்கேயும் சென்று கொண்டிருந்தேன். எனது பாதையில் இருந்து விலகினேன்.
அதற்கு முன்பு 8 மணி நேரம் மைதானத்தில் இருந்த நான், 4 மணி நேரம் மட்டுமே அங்கு இருந்தேன். இடையே எனது குடும்பத்திலும் சில பிரச்சினைகள் வந்தன. எனது தாத்தா இறந்துவிட்டார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். நான் எனது தவறுகளை குடும்பத்தினரிடம் ஒப்புக்கொண்டேன்.
எனது தந்தை என்னை ஆதரித்தார். அவர் என்னுடைய நல்லது மற்றும் கெட்டது என அனைத்தையும் பார்த்திருக்கிறார். எல்லோருடைய வாழ்வும் மேலேயும் கீழேயும் செல்லும். இது எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. எனது தந்தை எனக்கு சொன்ன அறிவுரை இதுதான்: 'பிரித்வி ஷா மட்டுமே தன்னை மேலே கொண்டு வர முடியும்!'
நான் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். வெளியே கூட அதிகம் செல்வதில்லை. நான் இப்போது குடும்பத்தினருடன் வெளியே செல்கிறேனா அல்லது வேறு எங்காவது சுற்றுவதற்கு செல்கிறேனா என்பது வெளியே இருந்து பார்க்கும் மக்களுக்குத் தெரியாது. நான் இப்போது தனியாக ஒரு வீட்டில் இருக்கிறேன். எனது தந்தை என்னை வந்து பார்த்துவிட்டு செல்கிறார். இப்போது நான் வெளியே செல்வதை விரும்புவதில்லை," என்றார் பிரித்வி ஷா.
அந்தப் பேட்டியில் அவரது நண்பர்கள்தான் அவரது வீழ்ச்சிக்கு காரணமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரித்வி ஷா: "இது அவர்களுடைய தவறு இல்லை. நான் மனதளவில் சரியானவனாக இல்லை. அதை நான் முன்பே புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அது ஒரு வேகத்தில் நடந்துவிட்டது. நான் இங்கேயும் அங்கேயும் என சென்று கொண்டிருந்தேன். அது எனது தவறுதான்.
அது எனது வாழ்க்கையின் கவனச்சிதறல் என்பதை நான் ஏற்றுக் கொண்டேன். அது இப்போது இல்லை. இப்போது நான் மிகவும் பலமானவனாக இருக்கிறேன். என்னுடைய நிலைக்கு நான் தான் காரணம். நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இப்போது நான் பலமானவனாக இருக்கிறேன், அறிவுடன் இருக்கிறேன். நான் கவனச்சிதறலுடன் நடந்து கொண்டால் அது எனது சொந்த விஷயம் தான். அங்கிருந்து விலகி நான் வேறு ஒரு இடத்தை அடைந்தால் அதுவும் என்னால்தான் நடந்தது. நான் யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை," என்றார் பிரித்வி ஷா.


Click it and Unblock the Notifications