மும்பை : இந்திய அணியில் இருந்து தாம் ஏன் நீக்கப்பட்டோம் என்ற காரணமே தமக்கு தெரியாது என்று இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். அண்டர் 19 கேப்டனாக உலகக் கோப்பை வென்ற பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.
இதன் மூலம் 18 வயதில் சதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். ஆனால் அதற்கு பிறகு பிரித்திவி ஷா வாழ்க்கை தலைகீழ் மாறியது.

பெரிய வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு பிரச்சனைகளை சிக்கி அணிக்குள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் பிரித்வி ஷா வெறும் ஐந்து டெஸ்ட் ,6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரித்வி ஷா தாம் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு என்னுடைய உடல் தகுதி தான் காரணம் என்று கூறினார்கள்.
சரி என்று பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்து உடல் தகுதியை நிரூபித்தேன். அதன் பிறகு தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தேன். அதனால் எனக்கு டி20 அணியில் இடம் கிடைத்தது. எனினும் பிளேயிங் லெவனில் நான் இடம்பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. எனினும் நான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றேன். அதை தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஏன் நீக்கப்பட்டேன் என்று யாரிடமும் சண்டையும் போட முடியாது.
என்னைப் பற்றி மற்றவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியும். என்னுடைய தனி உலகத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு நண்பர்கள் கிடையாது. நண்பர்கள் எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரியாது. இந்த தலைமுறைக்கு இதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உங்களுடைய சிந்தனைகளை யாரிடமும் சொல்லவும் முடியாது.
இந்த நிலையை நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கிறது. எனக்கு இரண்டு நண்பர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது. தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அழைப்பு வந்திருக்கிறது. அதில் நான் சிறப்பாக விளையாடி நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என நினைக்கிறேன் என்று பிரித்வி ஷா கூறினார். ஆசிய விளையாட்டு மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிரான டி20 என எந்த தொடரிலும் பிரித்வி ஷா இடம் பெறாத நிலையில் அவர் இங்கிலாந்து சென்று அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.