புரோ கபடி லீக் 2019: ஜெய்ப்பூர் பாந்தர்சை தூக்கிய உ.பி. யோதா..! பரபர போட்டியில் அசால்ட் வெற்றி
சென்னை : புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. யோதா அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் துவங்கப்பட்டது புரோ கபடி லீக். நாட்டின் பல நகரங்களில் நடக்கிறது. நடப்பு சீசன், கடந்த ஜூலை 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கியது. தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதி செல்லும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

12 நகரங்கள்
மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஐதராபாத், மும்பை, பாட்னா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன.

சென்னையில் தொடக்கம்
அடுத்த கட்டமாக சென்னையில், இந்த போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. வரும் 23ம் தேதிவரை, சென்னையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோதா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

மல்லுக்கட்டிய வீரர்கள்
துவக்கம் முதல் புள்ளிகள் பெற இரு அணி வீரர்களும் ஆர்வம் காட்டினர். ஒருத்தருக்கு ஒருவர் படு பயங்கரமாக மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் உ.பி.யோதா அணி முன்னிலை பெற்றது.

ஆதிக்கம்
இதையடுத்து முதல் பாதியின் முடிவில் யோதா அணி 16 - 10 என 6 புள்ளிகள் முன்னிலை பெற்றது. பரபரப்பாக துவங்கிய 2வது பாதியிலும் யோதா அணி வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

வீழ்த்தியது
கடைசி வரை ஜெய்ப்பூர் அணி வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனாலும் யோதா அணி வீரர்களின் ஆட்டத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், உ.பி.யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்தர்சை 31 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications