இந்திய வீரர்களே செய்யாத புரோ கபடி சாதனையை செய்த ஈரானிய வீரர் ஃபஸல் அட்ராச்சலி.. நெகிழ்ந்த கோச்
சென்னை: டபாங் டெல்லி அணியின் ஈரானிய வீரர் ஃபஸல் அட்ராச்சலி, புரோ கபடி லீக் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான வெற்றியில், கடைசி நேர டை-பிரேக்கரில் அவர் நிகழ்த்திய முக்கியமான சூப்பர் ரெய்டு, அவரது சாதனையை மேலும் சிறப்பாக்கியது.
இந்தப் போட்டிக்கு பின் டபாங் டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜோகிந்தர் நர்வால் தனது நட்சத்திர வீரரைப் பற்றிப் பேசிய வார்த்தைகள் கபடி ரசிகர்களை கவர்ந்தது. போட்டிக்குப் பிறகு, ஃபஸல் அட்ராச்சலியின் சாதனை குறித்துப் பேசிய ஜோகிந்தர் நர்வால், உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார்.
"அவர் என் சொந்த சகோதரன், என் பிள்ளை"
"அவர் ஒரு வீரர் என்று மட்டும் நான் நம்பவில்லை. அவர் என் சொந்த சகோதரன், அவர் என் பிள்ளை என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்கிறோம் - ஃபஸல், நான் மற்றும் ஒட்டுமொத்த அணியும். அவரிடம் இருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர் அவ்வளவு நல்ல மனிதர்" என்று அவர் கூறினார். ஃபஸல் களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் ஒரு ஹீரோ என்பதை தான் பயிற்சியாளர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஃபஸலின் பணிவான வார்த்தைகள்
தனது வரலாற்றுச் சாதனை குறித்து ஃபஸல் அட்ராச்சலி பேசியபோது, அதில் எந்தவிதமான தற்பெருமையும் இல்லை. மாறாக, அந்தப் பாதையில் உண்மையிலேயே நடந்த ஒருவரால் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஆழமான பணிவு இருந்தது. "200 போட்டிகள்... சீசன் 2-ல் நான் விளையாடத் தொடங்கியபோது, இப்படி ஒரு நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்றார் ஃபஸல்.
"நான் இங்கு வந்தபோது, யாரும் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை. நான் ஒரே ஒரு போட்டி விளையாட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது 200 போட்டிகளுக்குப் பிறகு நான் இங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று அவர் புரோ கபடி லீக் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications