Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணமே இவங்கதான்.. கேப்டன், பயிற்சியாளர் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: 2025 புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒருமுறை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கேப்டன் பவன் ஷெராவத் திடீரென நீக்கப்பட்ட விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், தற்போதைய கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் மற்றும் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் ஆகியோர் அணி நிர்வாகத்தின் மீது முன்வைத்துள்ள பகிரங்கக் குற்றச்சாட்டுகள், கபடி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் 43-44 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் தோல்வியடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், அணியின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குக் கேப்டனும், பயிற்சியாளரும் அளித்த பதில்கள், அணிக்குள் நிலவும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்தது.

Pro Kabaddi New Controversy in Tamil Thalaivas Captain Arjun Deshwal Coach Sanjeev Baliyan Blame Management

கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலின் ஆதங்கம்:

அடுத்த சீசனில் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, அர்ஜுன் தேஷ்வால் அணி நிர்வாகத்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: "அணியில் நான் என்ன மாற்றத்தைச் செய்ய முடியும்? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும், அணிக்குள் இருப்பவர்களுக்கும் என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். களத்தில் நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் திரைமறைவில் அர்ஜுனுடன் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அது அர்ஜுனுக்கு மட்டுமே தெரியும்."

"நான் என் அணியை நம்புகிறேன். ஆனால் என்ன சொல்வது? எல்லாவற்றையும் நீங்களே பார்த்தீர்கள். அர்ஜுன் மட்டுமே அணியை வெற்றி பெறச் செய்ய முடியாது. வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் என அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றுபட்டுச் செயல்பட்டால் மட்டுமே அணி வெற்றி பெறும்" என்று அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.

பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியானின் அதிர்ச்சிப் பேட்டி:

கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலின் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் மேலும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அணித் தேர்வில் தனக்கோ அல்லது கேப்டனுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்று அவர் கூறியது அனைவரையும் திகைக்க வைத்தது.

"அணியை மாற்றுவது அர்ஜுன் கையிலோ அல்லது பயிற்சியாளர் கையிலோ இல்லை. எங்களிடம் ஒரு 'அனலிஸ்ட்' (Analyst) இருக்கிறார். அவர்தான் அணியைத் தேர்வு செய்கிறார். அவர்களால் மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும். இது பயிற்சியாளரின் கையில் இல்லை. சொல்லப்போனால், போட்டி தொடங்குவதற்கு முன்பு, களமிறங்கும் முதல் ஏழு வீரர்கள் யார் என்பதை என்னிடம் சொல்வார்கள். இதில் அர்ஜுனாலும், பயிற்சியாளராலும் என்ன செய்ய முடியும்?" என்று அவர் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார்.

பவன் ஷெராவத் விவகாரத்தின் தொடர்ச்சியா?

சில வாரங்களுக்கு முன்பு, "ஒழுங்கீனப் பிரச்சினைகள்" காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், அணியிலிருந்தும் பவன் ஷெராவத் நீக்கப்பட்டார். இந்திய கபடி அணியின் கேப்டனுமான ஷெராவத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், "குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கபடியை விட்டே விலகத் தயார்" என்று சவால் விடுத்திருந்தார்.

அப்போது அவர் வெளியிட்ட வீடியோவில், "அணியை முன்னோக்கிக் கொண்டு செல்ல நானும், அர்ஜுன் தேஷ்வாலும் பல திட்டங்களை வைத்திருந்தோம். ஆனால், அணி நிர்வாகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரால், எங்களால் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, புதிய கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் மற்றும் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் ஆகியோரும் அணி நிர்வாகத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளதால், பவன் ஷெராவத் குறிப்பிட்ட அந்த "ஒரு நபர்" யார் என்ற கேள்வி வலுத்துள்ளது. அணித் தேர்வில் கூட பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் சுதந்திரம் இல்லை என்ற குற்றச்சாட்டு, தமிழ் தலைவாஸ் அணியின் உள்விவகாரங்கள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தொடர் சர்ச்சைகள், அணியின் செயல்பாடுகளையும், வீரர்களின் மனநிலையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

Story first published: Wednesday, October 22, 2025, 17:14 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+