
ரோகித் ஷர்மா
அபாயகரமான பேட்ஸ்மேன் வீரேந்திரசேவாக்கை வெளியே வைத்துவிட்டு உள்ளே வந்தவர் ரோகித் ஷர்மா. சிறப்பாக புல் ஷாட் அடிப்பதில் வல்லவர். 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டித்தொடரில் கணிசமாக ரன்குவித்தால் இவருக்கு உலக கோப்பை அணியில் துண்டு போட்டு சீட் பிடித்து கொடுத்துவிடுவார்கள்.

ஷிக்கர் தவான்
ஓப்பனிங்கில், கவுதம் கம்பீர் இடத்துக்கு வந்த ஷிக்கர் தவான், சமீபகாலமாக சற்று தடுமாறுகிறார். இங்கிலாந்து தொடரில் இவரைவிட கம்பீர் சிறப்பாக ஆடினால், இவரது இடம் ஆட்டம் கண்டுவிடும். கம்பீர் சமீத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பினார் என்பதால் ஷிகர்தவானுக்கு சரியான போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

விராட் கோஹ்லி
இவரது இடத்தை வேறு பிளேயரை வைத்து நிரப்ப முடியாது என்பதால் ஒருமனதாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கட்டான தருணங்களில் ஒரு இன்னிங்சை எப்படி கட்டி எழுப்புவது என்பது விராட்டுக்கு கைவந்த கலை. கடந்த உலக கோப்பை பைனலில் கூட இதை நிரூபித்துக்காண்பித்துள்ளார். கோபம் மட்டுமே இவரது பலவீனம்.

அஜிங்ய ரஹானே
நாலாவது வீரராக களமிறங்குவதில் புஜாராவுக்கும், ரஹானேவுக்கும் நடுவே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. புஜாராவை டெஸ்ட் கிரிக்கெட்டராக தேர்வுக்குழு பார்ப்பதால் அதிரடி ஆட்டக்காரர் ரஹானேவுக்கு உலக கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, புல் ஷாட் ஆடுவதில் கங்குலியை போலத்தான். இதுதான் ரெய்னாவின் பலவீனம். ஐபிஎல் பார்மை, லண்டனிலும் தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு இவருக்கும் சேர்த்து டிக்கெட் போடுவது நிச்சயம்.

சுரேஷ் ரெய்னா
வங்கதேசத்தில் வெற்றிவாகை சூடிய இளம் இந்திய அணியின் கேப்டன், சுரேஷ்ரெய்னாவுக்கு இந்திய அணியில் இடம் உள்ளது. அதே நேரம் புல் ஷாட்டுகளில் இவர் வீக்காக இருப்பதாக கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. ஐபிஎல் பார்மை தொடர வேண்டிய கட்டாயத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். இங்கிலாந்து தொடரில் இவரது ஆட்டம் எப்படி இருக்குமோ அதன்படிதான் ரெய்னாவின் தேர்வு அமைய உள்ளது.

மகேந்திரசிங் டோணி
நம்ம தல டோணிக்கு, பெரிய விசில் அடிப்பதை தவிர இந்திய அணிக்கு வேறு வழி கிடையாது. கடைசிகட்ட ஓவர்களில், உலகின் தற்போதைய தலைசிறந்த ஃபினிஷராக இருப்பவர் டோணி. யார் கண் பட்டதோ, சமீபகாலமாக அதிவேகப்பந்து வீச்சாளர்களின் அவுட்ஸ்விங், யார்க்கர்கள் இவரை சற்று அச்சுறுத்திவருகின்றன. எப்.சி.க்கு விட்டுள்ள ஹெலிகாப்டர், ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் பறக்கவிடப்பட்டால் மகேந்திரசிங் மீண்டும் கிங்தான்.

ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் ஆட வந்த புதிதில் கிடுகிடுவென ஆடிக்கொண்டிருந்த ஜடேஜாவை உன்னால் முடியும் தம்பி என தட்டிக்கொடுத்து வேலை வாங்கியது கேப்டன் கூல், மிஸ்டர் டோணிதான். இப்போதைக்கு உலகின் தலைசிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்ற புகழை ஜடேஜா அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அகண்ட மைதானங்களில் இடக்கை ஸ்பின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயினும் ஷாட் பிட்ச் பால்களை கையாளுவதில் இவரிடம் இந்தியா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
இவர் ஸ்பின்னரா, அல்லது மீடியம் பவுலரா, இல்லை எதுமாதிரியுமே இல்லாமல் புதுமாதிரியாக ஏதோ செய்துகொண்டுள்ளாரா என்ற கேள்வி சமீபகாலமாக ரசிகர்கள் மனதில் வேரோடிப்போயுள்ளது. சென்னை அம்பிதான், நம் அஷ்வின் என்றாலும், கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்ய ரசிகர்கள் தயாராக இல்லை. வந்த புதிதில் ஸ்பின்னில் ஜொலித்த அஸ்வின், இப்போதோ ஏதோதோ சேஷ்டைகள் செய்து காண்பித்து வருகிறார். அதற்கு 'பேட் மேல் பலன்' கிடைத்தும் வருகிறது. டோணியின் ஆதரவு இருப்பதால், அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், ஹர்பஜன் போன்றோர் அஸ்வின் இடத்தை பிடிக்க முடியாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.

புவனேஸ்வர் குமார்
கடந்தாண்டுதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கால்பதித்தாலும், தனது அனாயாசமான ஸ்விங்கிங் பவுலிங்கால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் புவனேஸ்வர் குமார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களிலும் இவர் பந்தை லாவகமாக ஸ்விங் செய்வது இந்தியாவுக்கு பலம்.

வருண் ஆரோன்
ஆஸ்திரேலிய பிட்சுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் ஹீரோக்களாக முடியும். இந்த பவுலர் வீசும் பந்தை புல் ஷாட் அடிக்கலாமா, வேண்டாமா என பேட்ஸ்மேன்கள் யோசிக்கும் அளவுக்கு பந்து சீறிப்பாய வேண்டும். இதற்காக இந்திய அணி இஷாத் சர்மா, உமேஷ்யாதவ், மோகித் ஷர்மா, ஜாகீர்கான் ஆகியோர் பெயர்களை பரிசீலித்தாலும், அதிவேக பந்து வீச்சை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உமேஷ்யாதவும், வருண் ஆரோனும் விஞ்சி நிற்கிறார்கள்.

முகமது சமி
மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய ஒரு சில இந்திய வீரர்களில் சமியும் ஒருவர். மேலும், இவரிடம் ஸ்விங் கலையும் கைகூடியுள்ளது. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியபடி முன்னேறிவரும் சமிக்கு, உலக கோப்பை அணியில் வாய்ப்பு உறுதி என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











