பொள்ளாச்சியில் என்ன நடக்குது? எனக்கு தெரியாதே..? வம்பாய் மாட்டிக் கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்
சென்னை:பொள்ளாச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை இணையத்தில் புகுந்த நெட்டிசன்கள் உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டனர்.
பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. பெண்கள் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பொள்ளாச்சி சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஆனால்... அங்கு நடப்பது என்ன? யாராவது சொல்லுங்கள் என்று வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
அவர் இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியில் போராட்டமா? பொள்ளாச்சியில் தற்போது என்ன நடக்கிறது? அது பற்றி எனக்கு தெரியாதே? யாராவது எனக்கு சொல்ல முடியுமா? என்று பதிவிட்டிருந்தார்.
அவ்வளவுதான்....இணையத்தில் புகுந்த நெட்டிசன்கள் அவரை பிழிந்து எடுத்துவிட்டனர். அஸ்வின் பிரபலமானவரா இருந்தால் என்ன? அந்த செய்தி என்ன? அங்கு நடப்பது கூட பார்க்காமல் ட்விட்டரில் கேள்வி கேட்பீர்களா? என்று கடுமையாக விமர்சித்து தள்ளிவிட்டனர்.


Click it and Unblock the Notifications