PSL தொடரில் சாதனை.. டி20 கிரிக்கெட்டில் வெறும் 3வது முறை.. பாபர் அசாம் சதம்..145 ரன்கள் விளாசிய ராய்
ராவல்பிண்டி : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குயிட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெஷ்வார் ஷால்மி அணியின் கேப்டன் பாபர் அசாம சதம் விளாசினார்.
பாபர் அசாம் இந்த தொடரில் 3 அரைசதம் அடித்தாலும், சில இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பாபர் அசாம் பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற லீக் டி20 ஆட்டத்தில் குயிட்டா கிளேடியட்டர்ஸ் அணியும், பெஷ்வார் ஷால்மி அணியும் மோதின. பெஷ்வார் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அபார தொடக்கம்
இதனையடுத்து, தொடக்க வீரர்களாக பாபர் அசாமும், சயிம் அயூப் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் குயிட்டா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். 24 பந்துகளில் அரைசதம் கடந்த சயிம் அயூப் 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

பாபர் அசாம் சதம்
எனினும் மறுமுனையில் முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம், பிறகு தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடகினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த பாபர் அசாம், பிறகு, அனைத்து பந்துவீச்சாளர்களையும் ஒரு கை பார்த்தார். இதன் மூலம் அடுத்த 28 பந்துகளில் மேலும் 50 ரன்கள் சேர்த்த பாபர் அசாம், 60 பந்துகளில் சதம் விளாசினார்.

இமாலய இலக்கு
தொடர்ந்து பாபர் அசாம் அதிரடி காட்டிய நிலையில், 65 பந்துகளில் 115 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ண்டவசமாக ரன் அவுட் ஆனார். இதில் 15 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் ரோமன் போவெல் 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் பெஷ்வார் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்துள்ளது.

சூப்பர் தொடக்கம்
இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குயிட்டா கிளேடியட்டர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மாடின் குப்தில் 8 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வில் ஸ்மித் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய், ருத்ரதாண்டவம் ஆடினார்.

44 பந்தில் சதம்
22 பந்தில் ஜேசன் ராய் அரைசதம் கடந்த நிலையில், அதன் பிறகு எப்படி பந்துவீசினாலும், பவுண்டரி , சிக்சர் என அடித்து எதிரணியின் பந்துவீச்சை தொங்கவிட்டார். இதன் மூலம் 44 பந்தில் சதம் அடித்த ஜேசன் ராய், 241 ரன்களை என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக தன்னுடைய அதிரடியை மேலும் அதிகப்படுத்தினார். ஜேசன் ராய்க்கு நல்ல துணையாக முகமது ஹபிஸ் 18 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

வரலாற்று சாதனை
ஜேசன் ராய் பவுண்டரியின் மூலம் 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை 10 பந்துகள் எஞ்சிய நிலையில் 18.2 வது ஓவரில் எட்டினார். ஜேசன் ராய் 63 பந்தில 145 ரன்கள் அடித்தத்ன் மூலம் பிஎஸ்எல் தொடரில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிக்கரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை குயிட்டா அணி பெற்றது. இந்தப் போட்டியில் குயிட்டா அணி 30 பவுண்டரிகளையும், 10 சிக்சர்களையும் அடித்தது.


Click it and Unblock the Notifications