Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதுச்சேரி மாநில கிரிக்கெட் பயிற்சியாளரை பேட்டால் அடித்து மண்டையை உடைத்த வீரர்கள்.. பிசிசிஐ விசாரணை

புதுச்சேரி: இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் (CAP) 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைமைப் பயிற்சியாளரை, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் மோசமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அண்டர்-19 அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பவர் எஸ்.வெங்கட்ராமன். இவரை உள்ளூர் வீரர்கள் சிலர் மைதானத்திலேயே வைத்துத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Puducherry Cricket Coach Assaulted with Bat by Local Players Over SMAT Team Selection

2025 சையத் முஷ்டாக் அலி ட்ராபி (SMAT) டி20 தொடருக்கான புதுச்சேரி அணியில் தங்களைத் தேர்வு செய்யாத ஆத்திரத்தில், மூன்று வீரர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பயிற்சியாளர் வெங்கட்ராமனின் மண்டை உடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நெற்றியில் 20 தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும், அவரது தோள்பட்டையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

நேற்று காலை 11 மணியளவில் புதுச்சேரி கிரிக்கெட் சங்க வளாகத்தில் உள்ள வலைப்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளர் வெங்கட்ராமன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் ஜெயசுந்தரம், அரவிந்தராஜ் மற்றும் சந்தோஷ் குமரன் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள், பயிற்சியாளரிடம் தகராறு செய்துள்ளனர். இவர்கள் மூவருமே புதுச்சேரி அணிக்காக ஆடிய வீரர்கள்.

"எங்களை ஏன் அணியில் எடுக்கவில்லை? நீங்க தான் காரணம்" என்று கூறி வாக்குவாதம் செய்த அவர்கள், கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் பயிற்சியாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ள வெங்கட்ராமன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தப்பியதாகக் கூறியுள்ளார். "அரவிந்தராஜ் என்னைப் பிடித்துக்கொள்ள, சந்தோஷ் குமரனிடம் இருந்த பேட்டை வாங்கி கார்த்திகேயன் என்னை அடித்தார். என்னைக் கொன்றால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் செயலாளர் ஜி.சந்திரன் கூறியதாகச் சொல்லிக்கொண்டே அடித்தார்கள்" என்று எஃப்.ஐ.ஆரில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டைச் சந்திரன் மறுத்துள்ளார்.

தலைமறைவான வீரர்கள்

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள செதரப்பட்டு போலீஸார், தாக்குதல் நடத்திய மூன்று வீரர்களையும் தேடி வருகின்றனர். அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். புதுச்சேரி கிரிக்கெட்டில் வெளிமாநில வீரர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து, உள்ளூர் வீரர்கள் என்ற பெயரில் விளையாடுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் உள்ளன.

இதனால் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விரக்தியின் உச்சக்கட்டமாகவே பயிற்சியாளர் மீதான தாக்குதல் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா கூறுகையில், "இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிசிசிஐ விரைவில் விசாரணை நடத்தும்" என்று உறுதியளித்துள்ளார்.

Story first published: Wednesday, December 10, 2025, 7:39 [IST]
Other articles published on Dec 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+