பாக்கெட்டில் “பாட்டில்”-ஐ வைத்துக் கொண்டு பேட்டிங் செய்த புஜாரா.. ஓவரா இருக்கே!!
ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆடும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா அருமையாக ஆடி அரைசதம் அடித்தார்.
இந்த போட்டியில் புஜாரா பாக்கெட்டில் பாட்டிலை வைத்துக் கொண்டு பேட்டிங் செய்த வீடியோ இணையத்தை வலம் வந்து கொண்டுள்ளது.
புஜாரா ஏன் பாட்டிலோடு மைதானத்துக்கு போனார்? வாங்க பார்ப்போம்.

பொறுப்பான ஆட்டம்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்டில், துவக்க வீரர் ராகுல் ரன் ஏதும் அடிக்காமல் முதல் ஓவரிலேயே வெளியேற களத்தில் இறங்கினார் புஜாரா. இன்று அறிமுக போட்டியில் ஆடும் ப்ரித்வி ஷாவோடு இணைந்த புஜாரா பொறுப்பாக ஆடினார்.
ரன் குவிப்பு
இருவரும் இணைந்து ஒருநாள் போட்டி போல ரன் குவித்தனர். புஜாரா இடை இடையே வழக்கம் போல கொஞ்சம் கட்டை போட்டார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். இவர்கள் ஆட்டத்தின் இடையே, ஒரு ஓவருக்கு இடையே புஜாரா தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

பாட்டிலுக்கு என்ன காரணம்?
ஒரு நிமிடம் "என்னடா இது!" என அனைவரும் ஆச்சரியமடைந்து விட்டனர். காரணம், இது போல ஒரு பேட்ஸ்மேன் களத்திற்குள் தண்ணீர் பாட்டிலை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆடி நாம் பார்த்ததே இல்லையே என்பதுதான். சௌராஷ்டிராவின் ராஜ்கோட் மைதானத்தில் தான் இந்த முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. புஜாராவுக்கு இது தான் சொந்த மைதானம். புஜாரா அடிக்கடி இங்கே ஆடிய அனுபவத்தால் இங்கே இருக்கும் வெப்ப சூழ்நிலை தெரிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்திருக்கலாம். ஆனால், இது கொஞ்சம் ஓவர் தான். கூப்பிட்டால் ஓடி வந்து தண்ணீர் கொடுக்க மாட்டார்களா?

பட்டையை கிளப்பிய கூட்டணி
புஜாராவுடன் ஆடிய ப்ரித்வி ஷா இன்று பட்டையை கிளப்பினார். அவர் 99 பந்துகளில் சதம் அடித்து, அறிமுக போட்டியில் சதம், இளம் வயதில் சதம் என ஏராளமான சாதனைகளை செய்தார். புஜாரா 86 ரன்களிலும், ப்ரித்வி ஷா 134 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனா, தண்ணீர் பாட்டிலை பாக்கெட்ல வச்சுக்கிட்டு, இந்த மனுஷன் எப்படி தான் ரன் எடுக்க ஓடினாரோ?


Click it and Unblock the Notifications