மும்பை: சமீபத்தில் ஓய்வை அறிவித்த புஜாராவை "இந்திய கிரிக்கெட்டின் வைட் வாக்கர்" என்று வர்ணித்த அஸ்வின், நம்பமுடியாத ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார்: "விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததற்கு புஜாராவின் பங்களிப்பு மிக முக்கியமானது." என்று கூறி உள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், புஜாராவின் பங்களிப்பு பல சமயங்களில் கவனிக்கப்படாமல் போனாலும், அது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பங்களிப்புக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று அழுத்தமாக கூறி உள்ளார்.

"நம்பினால் நம்புங்கள், விராட் கோலியின் பல ரன்களுக்குப் பின்னால் புஜாராவின் உழைப்பு இருக்கிறது," என்று கூறிய அஸ்வின், அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
"ஒரு டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில், புதிய பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். புஜாரா 3-வது வீரராகக் களமிறங்கி, எதிரணியின் சிறந்த பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்வார். பந்தின் பளபளப்பைக் குறைத்து, ஆடுகளத்தின் தன்மையை முழுமையாகக் கணித்து, அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் (குறிப்பாக கோலியின்) வேலையை மிகவும் எளிதாக்குவார். இந்த நன்றி எதிர்பார்க்காத கடினமான வேலையை புஜாரா பல ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார்" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.
2018-19 ஆஸ்திரேலிய தொடரின் போது, புஜாராவின் அசைக்க முடியாத பேட்டிங்கைப் பார்த்து, அவருக்கு "இந்திய கிரிக்கெட்டின் வைட் வாக்கர்" என்று தான் பெயர் சூட்டியதாக அஸ்வின் கூறினார்.
"பிரபலமான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வெப் சீரிஸில் வரும் 'வைட் வாக்கர்' என்ற கதாபாத்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் புஜாராவை அப்படித்தான் அழைப்பேன். அவர் மெதுவாக நடப்பார், ஆனால் களத்தை விட்டு வெளியேறவே மாட்டார். எதிரிகளைச் சோர்வடையச் செய்து வீழ்த்துவார்" என்று அந்தப் புனைப்பெயருக்கான காரணத்தை அஸ்வின் விளக்கினார்.
புஜாராவின் அர்ப்பணிப்பிற்குச் சில முக்கிய தருணங்களை அஸ்வின் உதாரணமாகக் சுட்டிக் காட்டி இருக்கிறார். "தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியின் போது, ஆடுகளம் மிகவும் அபாயகரமானது என நடுவர்களால் அறிவிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்தப் போட்டியில், தனது முதல் ரன்னை எடுப்பதற்கு புஜாரா 53 பந்துகளை எதிர்கொண்டார். அவரது அந்த நிதானமான ஆட்டம்தான் அந்த குறைந்த ஸ்கோர் போட்டியில் இந்தியாவைக் காப்பாற்றியது."
"அதே போல, வரலாற்றுச் சிறப்புமிக்க காபா டெஸ்ட் வெற்றியில், புஜாரா 211 பந்துகளைச் சந்தித்து 56 ரன்கள் எடுத்தார். அதைவிட முக்கியமாக, பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைத் தனது உடலில் 11 முறை வாங்கிக்கொண்டு, அவர்களின் உத்வேகத்தைக் குறைத்தார்."
"புஜாராவின் பங்களிப்பு நம்பமுடியாதது. மக்கள் அவரைப் பற்றி அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவர் ஒரு உண்மையான லெஜண்ட் (bona fide legend). அவரைப் போன்ற வீரர்கள் மிகக் குறைவு," என்று அஸ்வின் குறிப்பிட்டார்.