மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய செதேஷ்வர் புஜாரா, தனது ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், புகழாரங்களையும் சூட்டி வருகின்றனர். ஆனால், இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஒரு கிண்டலான பதிவு, இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
103 டெஸ்ட் போட்டிகளில் 7,195 ரன்கள் குவித்து, இந்திய அணியின் 8-வது அதிகபட்ச டெஸ்ட் ரன் குவிப்பாளர் என்ற பெருமையுடன் புஜாரா விடைபெற்றுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா அளவுக்கு கொண்டாடப்படவில்லை என்றாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகளில் புஜாராவின் பங்கு அளப்பரியது.

புஜாராவின் ஓய்வு குறித்து, ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், "செதேஷ்வர் புஜாராவின் ஓய்வு முடிவு குறித்து நாங்கள் கருத்து கூறப் போவதில்லை, ஏனென்றால் அவர் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார் என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புஜாரா இந்திய அணியில் இடம்பெறாததை குத்திக்காட்டும் வகையில், நகைச்சுவை என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த வரம்பு மீறிய பதிவு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஒருவரை இவ்வாறு கிண்டல் செய்யலாமா? என எதிர்வினை ஆற்றி உள்ளனர்.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்தப் பதிவுக்குக் கீழ், ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். "ஒரு ஜாம்பவானை எப்படி மதிக்க வேண்டும் என்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நாட்டின் மக்கள் தொகையை விட புஜாரா அதிக ரன்கள் எடுத்துள்ளார்" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
"நகைச்சுவைக்கும், அவமதிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் எல்லையைத் தாண்டிவிட்டீர்கள்" என்று மற்றொரு ரசிகர் கண்டித்துள்ளார். "உங்களுக்கு கிரிக்கெட்டில் என்ன தகுதி இருக்கிறது அவரைப் பற்றிப் பேச? இது மிகவும் தரம் தாழ்ந்த செயல்" எனப் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒருபுறம் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் இவ்வாறு கிண்டலடிக்க, மறுபுறம் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர், புஜாராவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். "புஜாரா, நீங்கள் 3-வது வீரராகக் களமிறங்குவதைப் பார்ப்பது எப்போதுமே ஒருவித நிம்மதியைக் கொடுக்கும். நீங்கள் அமைதி, தைரியம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆழமான காதலை வெளிப்படுத்தினீர்கள். 2018-ல் ஆஸ்திரேலியாவில் நாம் வென்ற டெஸ்ட் தொடர் வெற்றி, உங்களின் நம்பமுடியாத மன உறுதி இல்லாமல் சாத்தியமில்லை," என்று சச்சின் புகழ்ந்துள்ளார்.
வித்தியாசமான மற்றும் கிண்டலான பதிவுகளுக்குப் பெயர் பெற்ற ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், இந்த முறை ஒரு ஜாம்பவானின் ஓய்வு குறித்து வெளியிட்ட பதிவு, நகைச்சுவை என்ற எல்லையைத் தாண்டி, அவமரியாதையாக அமைந்ததால், கிரிக்கெட் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.