"விக்கெட்டை சும்மா தூக்கி எறியாதே.. அணியில் இடம் போய்விடும்” சாய் சுதர்ஷனுக்கு புஜாரா வார்னிங்
கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 இடத்தில் ஆடிவரும் தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒரு மிக முக்கியமான "அக்னிப் பரீட்சையாக" அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசி மிரட்டியுள்ள இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரெல், அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், சாய் சுதர்ஷன் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா, "சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை சும்மா தூக்கி எறியக்கூடாது. ஜுரெல் ரன் குவிக்க ஆரம்பித்தால், நிலைமை மாறலாம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான 24 வயதான சாய் சுதர்ஷன், இதுவரை பெரிய அளவில் சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 30.33 என்ற சராசரியுடன் 273 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்யாமல் அவர் தடுமாறி வருகிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிராக நடந்த இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில்கூட, அவர் மொத்தமாக 84 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங்கில் உள்ள சில தவறுகளால், ஸ்டம்பை நோக்கி அதிகமாக நகர்ந்து ஆடுகிறார். அதனால் அவர் லெக்-சைடில் எளிதாக ஆட்டமிழக்கக் காரணமாக அமைந்துள்ளது.
மறுபுறம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல், தென்னாப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் காரணமாக, முதல் டெஸ்டில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக நம்பர் 6 இடத்தில் அவர் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. ஜுரெல் தனது ரன் வேட்டையைத் தொடர்ந்தால், பேட்டிங் வரிசையில் அவருக்கு நம்பர் 3 இடத்தைக் கொடுக்கவும் அணி நிர்வாகம் யோசிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
புஜாராவின் அறிவுரை
இந்தச் சூழல் குறித்து ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய செதேஷ்வர் புஜாரா, சாய் சுதர்ஷனுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். "இந்தத் தொடர் சாய் சுதர்ஷனுக்கு மிகவும் முக்கியமானது. அவர் ஒரு இளம் வீரர், வேகமாக முன்னேறி வருகிறார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஓரளவு ரன்கள் எடுத்தார். அவரிடம் திறமை இருக்கிறது."
"ஆனால், நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும். சில சமயங்களில் மென்மையான முறையில் ஆட்டமிழந்து விடுகிறார். எனவே, அவர் தனது விக்கெட்டை சும்மா தூக்கி எறியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த முதல் டெஸ்ட் சதம் வந்துவிட்டால், அவரது தன்னம்பிக்கை பல மடங்கு உயரும்" என்றார் புஜாரா.
மேலும், "இது நம்பர் 3 இடத்திற்கான போட்டி மட்டுமல்ல. ஆடும் லெவனில் தனது இடத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஒருவேளை துருவ் ஜுரெல் ரன் குவிக்க ஆரம்பித்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் வேறு ஒரு பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படலாம். எனவே, ஒரு இடது கை பேட்ஸ்மேனாக நம்பர் 3 இடத்தைத் தக்கவைப்பது சாய் சுதர்ஷனுக்கு மிகவும் முக்கியம்" என்று புஜாரா தெரிவித்தார்.
புஜாராவின் இந்தக் கருத்து, சாய் சுதர்ஷன் மீதான அழுத்தத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு சதமடித்தால் மட்டுமே, இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications