வெறும் 48 பந்துகளில் கடைசி 7 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!
புனே: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து பேட் செய்த இந்தியா 105 ரன்களில் சுருண்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

சுருண்ட இந்தியா
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது. 40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. அதிலும் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியா.

கடைசியில் சொதப்பல்
சரியாக சொல்லப்போனால், 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இந்தியா 105 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது கொடுமை. 95 ரன்னிலேயே 5, 6, 7 என மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது இந்தியா. 98 ரன்களுக்கு 8வது விக்கெட்டையும், 101 ரன்களுக்கு 9வது விக்கெட்டையும் இழந்த இந்தியா, 105 ரன்களில் ஆல்அவுட்டானது.

கோஹ்லி டக்அவுட்
கோஹ்லி அபூர்வமாக இன்று டக்அவுட்டானார். ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். 2 பந்துகளை அவர் சந்தித்திருந்தார். டெஸ்ட் போட்டியில் கோஹ்லி டக்அவுட்டாவது இது 5வது முறையாகும்.

சுழற்பந்து
இதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவின், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேதான். மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சியளித்தார். முதலாவது நாள் முதலே சுழலுக்கு ஏற்ப செயல்பட்டது புனே பிட்ச். ஆஸ்திரேலியாவை சுழலில் சுருட்டும் வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது கண்கூடு. ஆனால், அது இந்தியாவுக்கே பிரச்சினையாக முடிந்துவிட்டது பெரும் சோகம்.


Click it and Unblock the Notifications