மொஹாலி: மொஹாலியில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சுருட்டியது.
தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நேற்று மேலும் ஒரு மோசமான நாளாக அமைந்தது. சொந்த மைதானமான மொஹாலியில் அவர்கள் சந்தித்த 3வது தொடர் தோல்வியாக நேற்றைய போட்டி அமைந்து விட்டது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் கெயிலும், கங்குலியும். கெயில் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கங்குலி அடித்து நொறுக்கி 50 ரன்களைக் குவித்து வெளியேறினார்.
பின்னர் வந்தவர்களில் மனோஜ் திவாரி பின்னி எடுத்து விட்டார். இவரை அவுட்டாக்க பஞ்சாப் அணியினர் மேற்கொண்ட ஒரு முயற்சியும் பலிக்கவில்லை. வந்த பந்தையெல்லாம் ரன்களாக்கி மிரட்டினார் திவாரி.
47 பந்துகளைச் சந்தித்த திவாரி 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 75 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. இந்தத் தொடரில் கொல்கத்தா அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
பின்னர் ஆட வந்தது பஞ்சாப். ரவி போபாரா டக் அவுட் ஆனார். யுவராஜ் சிங் 24 ரன்களை எடுத்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களும் சின்ன ஸ்கோருடன் நடையைக் கட்டவே அணி தடுமாறியது. அதிகபட்சமாக கேப்டன் சங்கக்காரா 30 ரன்கள் எடுத்தார்.
இர்பான் பதான் 14 பந்துகளில் 22 ரன்களைக் குவித்தார். இருந்தும் 20 ஓவர்கள் நிறைவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியுற்ற வந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
ஆட்ட நாயகனாக திவாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.