மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் டி காக் மாற்று துவக்க வீரராக களமிறங்கினார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், இந்த சீசனின் தனது முதல் போட்டியில் விளையாடிய குயின்டன் டி காக் விஸ்வரூபம் எடுத்தார்.
அதிரடியாக அரைசதம் கடந்த அவர், ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கே எல் ராகுல் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

கே.எல். ராகுல் - 31 முறை
குயின்டன் டி காக் - 25 முறை
எம்.எஸ். தோனி - 24 முறை
தினேஷ் கார்த்திக் - 21 முறை
ரிஷப் பண்ட் - 21 முறை
சஞ்சு சாம்சன் - 20 முறை
மும்பை அணியின் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி செய்த சில தவறுகள் அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது. நமன் தீர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை யுஸ்வேந்திர சாஹல் கோட்டை விட்டார். அதேபோல், டி காக்கை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட டி காக் - நமன் தீர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. இது பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை வீரர்கள் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
நடு ஓவர்களில் பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை அணி 7 முதல் 13 ஓவர்களுக்குள் மட்டும் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களைக் குவித்தது. சாஹல் 3 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி, பின்னர் டி காக் மற்றும் நமன் தீர் கொடுத்த பதிலடியால் நிலைகுலைந்தது. டி காக் கடைசி வரை நின்று சதம் கடந்து மொத்தம் 112 ரன்கள் குவித்து இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் மிரட்டலாகப் பந்துவீசினார். தனது இரண்டாவது ஓவரில் ரையான் ரிக்கெல்டன் மற்றும் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன் பியூஷ் சாவ்லா செய்திருந்த சாதனையை அவர் முறியடித்தார்.