சென்னை : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டதற்கு அவருடைய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் போது சஞ்சு சாம்சனை சேர்க்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது youtube பக்கத்தில் உலகக் கோப்பை போன்ற தொடர் நடக்கும்போது நமது வீரர்கள் அனைவரையும் இந்தியாவின் பிரதிநிதிகளாகவே பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அதிலிருந்து ரசிகர்கள் விடுபட்டு அனைத்து வீரர்களும் இந்தியாவுக்காக விளையாடும்போது அனைவருக்குமே ஒரே மாதிரியான ஆதரவை வழங்க வேண்டும்.
ஒருவர் இந்திய அணிக்காக விளையாடினால் அவர் ஐபிஎல் தொடரில் சிறந்து செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். இப்போது ரசிகர்கள் எல்லாம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகும் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக மோதலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. உதாரணத்திற்கு சூரியகுமார் யாதவும் விராட் கோலியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நீங்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களாக இல்லாமல் இருந்தாலும் சரி நீங்கள் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி நம்மை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைப்போம். தேர்வு குழுவினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயம் தெரியும்.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் போது சில முக்கியமான வீரர்கள் இடம்பெறாமல் போவது உண்டு.உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.