சென்னை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற தமிழக வீரர் அஸ்வின், தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் அனைத்து விதமான பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், இன்று மிகவும் ஸ்பெஷலான நாள் என்பதால், ஒரு நல்ல தொடக்கத்துடன் இன்றைய நாளை தொடங்குகிறேன். அனைத்து விதமான முடிவுகளுக்கும் ஒரு நல்ல தொடக்கம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது போல் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரராக எனது பணி முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், உலகின் பல கிரிக்கெட் லீக் தொடர்களிலும் விளையாடும் நேரம் தொடங்கிவிலட்டது. இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு ஐபிஎல் அணிகளுக்கும், பிசிசிஐக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் பல நல்ல நினைவுகளையும், நல்ல உறவுகளையும் பெற்றுள்ளேன்.
இனி என்னுடன் எஞ்சிய நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள ஆவலாக இருக்கிறேன் என்று அஸ்விக்ன கூறியிள்ளார். 39 வயதை நெருங்கும் அஸ்வின், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் பிரவீஸை கூடுதல் விலை கொடுத்து சிஎஸ்கே வாங்கியது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இது சிஎஸ்கே அணிக்கும் மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், ஒரு விளக்க அறிக்கையையும் சிஎஸ்கே தந்தது. இதன் மூலம் பல்வேறு அணிகளும் அஸ்வினை பிளாக்லிஸ்ட் செய்ய முடிவு எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் கூறியுள்ளார். இதுவரை அஸ்வின் சிஎஸ்கே, பஞ்சாப் அணி, டெல்லி கேபிட்டஸ், புனே ஆர்பிஎஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
இதுவரை அஸ்வின் ஐபிஎல் தொடரில் 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் 98 இன்னிங்ஸ் விளையாடி 833 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். தற்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியதன் மூலம், உலகில் நடைபெறும் மற்ற லீக்கில் அஸ்வின் விளையாட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.