
புஜாராவின் பலம்
புஜாரா குறித்து சொல்ல வேண்டுமென்றால், நாம் பந்து வீசும் முன்பே அவர் தன் காலை எடுத்து ரன் எடுக்க தயாராகி விடுவார். இரண்டு ஸ்டேப் நகர்ந்து வந்து எங்கு பந்து பிட்ச் ஆகிறதோ, அதனை பார்த்து அடிப்பார். ஆனால் பந்து தரையோடு பயணிக்கும் வகையில் தான் அவருடைய ஷாட்கள் இருக்கும். அவருக்கு எப்போது ரன்கள் தேவைப்பட்டாலும் அவர் தரை மார்க்கமாகவே பந்தை அடிப்பார். இதன் மூலம் அவர் ஆட்டம் இழக்க மாட்டார்.புஜாராவை எனக்கு பல காலமாக தெரியும். அவருடைய விளையாட்டு, அவருடைய குணாதிசயத்தின் தொடர்ச்சியாகவே நான் கருதுகிறேன்.

பிடிவாதக்காரர்
ஆம் புஜாரா ஒரு பிடிவாதக்காரர். நீங்கள் புஜாராவிடம் பேசி ஜெயிக்கவே முடியாது. புஜாராவிடம் விவாதம் செய்வதற்கு நாம் சும்மாவே இருந்துவிடலாம். ஏதேனும் ஒரு விவாதத்தை நாம் பேச தொடங்கி விட்டோம் என்றால், புஜாரா அவருடைய கருத்திலிருந்து பின்வாங்கவே மாட்டார். புஜாராவிடம் நாங்கள் எப்போதெல்லாம் விவாதம் செய்யத் தொடங்கினாலும், எங்களை சுற்றி உள்ளவர்கள் அஸ்வின் உன்னால் அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது. எதற்கு தேவையில்லாமல் பேசுகிறாய் என்றுதான் கூறுவார்கள்.

மாற்றி கொள்ள மாட்டார்
புஜாரா, முரளி விஜய் எல்லாம் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆனால் அவர்களை ரசிகர்கள் போதிய அளவு கொண்டாடவில்லை. புஜாராவுக்கும், விஜய்க்கும் இடையே நிறைய வாக்குவாதங்கள் நிகழும். அப்போது முரளி விஜய் மற்ற அனைவரையும் தமக்கு ஆதரவாக திரட்டி கொள்வார். ஆனால் புஜாரா, அப்போதும் தனி ஆளாக நின்று அனைத்து விவாதத்தையும் எதிர்கொள்வார். நீங்கள் புஜாராவிடம் சாட்சிகளை எல்லாம் எடுத்து காண்பித்தால் கூட அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொள்ளவும் மாட்டார். நம்முடைய பேச்சால் வெறுப்படையவும் மாட்டார்.

புஜாராவுடனான விவாதம்
இந்த பிடிவாதத்தை அவர் பேட்டிங் செய்யும் போது காண்பித்து, எதிரணி பந்துவீச்சை நிலைக்குலைய செய்து விடுவார். இதனால் நான் புஜாராவுக்கு ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறேன். தமிழில் நாங்கள் புஜாராவை மிருகம் என்று தான் கூறுவோம். மிருகம் என்பது தன்னுடைய இரையை பிடிக்க ஒரே குறிக்கோளில் இருக்கும். அதே போல் தான் புஜாராவும் தன்னுடைய குறிக்கோளிலிருந்து மாற்றிக் கொள்ளவே மாட்டார். ஒருமுறை புஜாராவிடம் நீங்கள் பல ஷாட்களை விளையாட கற்றுக் கொண்டால், ஒருநாள் கிரிக்கெட்டிலும் பெரிய வீரராக வருவீர்கள் என்று கூறினேன்.

ஏற்று கொள்ளவே இல்லை
ஆனால் அவர் கடைசி வரை நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஒருவேளை அவருக்கு இரண்டு முறை பெரிய காயம் ஏற்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு, எனது கருத்தை அவர் ஏற்காமல் இருந்திருக்கலாம். புஜாராவின் இந்த பிடிவாத குணத்தால் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் அவர் சதம் அடித்திருக்கிறார். புஜாரா மெதுவாக விளையாடுகிறார். இதனால் மற்ற பேட்ஸ்மேன்கள் வேகமாக விளையாட முற்பட்டு ஆட்டம் இழந்து விடுகிறார்கள் என்று பலர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் புஜாரா புதிய பந்தை எதிர்கொண்டு களத்தில் நின்று நடு வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு சூழலை சுலபமாக்கி செல்கிறார்.

பாராட்டு
இதன் காரணமாகவே பலர் சதம் அடிக்கிறார்கள். ஆனால் இதனை யாரும் கொண்டாடுவதில்லை. புஜாரா அதிரடி காட்டாமல் தரையிலே பந்தை அடிப்பதற்கு அவருடைய தந்தையும் ஒரு காரணமாக இருக்கலாம். புஜாரா தூக்கி அடித்து விட்டால் அவர் தந்தை வீட்டிலே சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். புஜாராவை பாராட்டும் விதமாக நாம் பல காமெடிகளை அடித்தாலும், இரண்டு பெரிய காயங்களை எதிர்கொண்டு இந்திய அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடுவது நகைச்சுவை கிடையாது. புஜாரா அணிக்காக எவ்வளவு செய்திருக்கிறார். அவர் விளையாடும் போது நாங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்வோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்காகவே நான் புஜாராவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











