சென்னை : பயிற்சியாளர்களை மட்டுமே இளம் வீரர்கள் நம்பி இருந்தால் அது ஆபத்தையே கொடுக்கும் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் என்று ஒருவரே இல்லாத சூழல் தான் இருக்கும்.
ஒவ்வொரு அணிக்கும் மேலாளர் என்பவர் மட்டும்தான் இருப்பார். அந்த மேலாளர் என்பவர் அணியின் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் உணவு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார். மேலும் தமக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வார். இல்லையென்றால் ஏதேனும் ஐடியா வழங்குவார்.

இப்படித்தான் இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றது. ஆனால் காலம் மாற மாற பயிற்சியாளர் என்ற பதவி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தது. பேட்டிங்கிற்கு பயிற்சியாளர், பந்துவீச்சுக்கு என தனி பயிற்சியாளர், பில்டிங்க்கு என தனிப்பயிற்சியாளர்,மனதை வலிமையாக வைத்துக் கொள்ள தனி பயிற்சியாளர், உடற்பயிற்சிக்கு தனிப் பயிற்சியாளர் என பல பயிற்சிகள் தற்போது வந்து விட்டார்கள்.
சில வீரர்கள் தனியாக சில பயிற்சியாளர்களை வைத்து கிரிக்கெட் கற்று வருகிறார்கள். இந்த நிலையில் தான் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது பயிற்சியாளரை நம்பியே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் ஒரு ஆபத்தான வழிமுறையாக நான் கருதுகிறேன். எப்போதுமே யாரையும் சார்ந்து நாம் இருக்கக் கூடாது.
இப்படி தொடர்ந்து ஒருவரை சார்ந்து நீங்கள் விளையாடி வந்தால் உங்களுக்கு என்று புதிய யோசனைகள் எதுவுமே வராது.
பயிற்சியாளர் என்ற ஒருவர் பல அறிவுரைகளையும் பல வழிகளையும் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட வழிகள் ஒரு வீரருக்கு சரியாக பொருந்துகிறது என்றால் அது மற்ற வீரருக்கும் சரியாக பயன்படும் என்பது கிடையாது.
தற்போது உள்ள நவீன கால கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடிக்காத விதி என்றால் ஒரு வீரருக்கு ஏதோ ஒரு யுக்தி சரியாக செயல்பட்டது என்றால் அதையே யுக்தியை மற்ற கிரிக்கெட் வீரர்களும் காப்பியடிக்க வேண்டும் என பயிற்சியாளர்கள் சொல்வது தான். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முன் வீசப்படும் சவால்களுக்கு அவர்களை முயன்று பதில் அளிக்க வேண்டும்.
நிச்சயமாக கிரிக்கெட் வீரர்களுக்கு மற்றவர்கள் உதவி தேவைப்படும். ஆனால் அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்த கூடாது. நான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது டபுள்யூ வி ராமன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பல புதிய விஷயங்களை வெளிப்படுத்த தூண்டு கோலாக இருந்தார். அவர் எனக்கு பல வழிகளை காட்டினார். அதில் எந்த வழி சிறந்தது என்பதை நானே தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு டபிள்யூ வி ராமன் உதவிகள் செய்தார். ஆனால் அதற்கு என்று நான் அவரையே சார்ந்து செயல்படவில்லை.
உங்கள் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு உங்களிடம் இல்லை என்றால் உங்களுக்கு நீங்களே கற்றுத் தர முடியவில்லை என்றால் நீங்கள் மற்றவரை சார்ந்து தான் இருக்க வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. இதற்காக பயிற்சியாளர்கள் இருக்கும் வீரர்கள் அவர்களே சார்ந்து விளையாடி சாதித்தது கிடையாதா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது உங்களின் முழு திறமையை வெளிக் கொண்டு வராது என்பது தான் உண்மை என்று அஸ்வின் கூறியுள்ளார்.