மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று (செப்.8) வெளியானது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இந்திய டி20 அணியில் அஷ்வின் இடம் பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்பின்னர் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது.
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நேற்று (செப்.8) உலகக் கோப்பைக்கான இந்திய அணி வெளியானது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியில், ரோஹித் சர்மா(wc) , விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவாய்ட் செய்யப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா கூறுகையில், "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஷ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அஷ்வின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பழமொழி ஒன்றை பதிவிட்ட அஷ்வின் அதன் கேப்ஷனில், "2017: இதை சுவரில் எழுதுவதற்கு முன் இந்த குறிப்பை என் டைரியில் 10 லட்சம் முறையாவது எழுதியிருப்பேன்! நாம் படிக்கும் மற்றும் ரசிக்கும் மேற்கோள்கள் உள்வாங்கி, நாம் அதனை நம் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அவை அதிக சக்தி பெறுகின்றன. மகிழ்ச்சியும் நன்றியும் மட்டுமே இப்போது நான் சொல்ல வேண்டிய 2 வார்த்தைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் ரசித்து அனுபவித்த மேற்கோள் இது தான். "ஒவ்வொரு சுரங்கப் பாதையின் இறுதியும் வெளிச்சத்தை கொண்டிருக்கும். ஆனால், அந்த சுரங்கத்தில் இருப்பவர்கள், அந்த வெளிச்சத்தை ஒருநாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே வாழ்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் ஒருநாள் வரும். அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அதனை அனுபவிப்பார்கள் என்று அந்த பழமொழி மூலம் உணர்த்தியுள்ள அஷ்வினின் இந்த ட்வீட் ஏக வைரல்.