R Ashwin :இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத இடத்தை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பிடித்திருக்கிறார். முரளிதரனுக்கு பிறகு அதிவேகமாக 500 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அஸ்வின் மேலும் பல சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில் அஸ்வின் குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் அஸ்வினை அவர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து எழுதியுள்ள அவர், அஸ்வினை எதிர்கொள்வது ஒரு பேட்ஸ்மேனுக்கு சவாலான விஷயம் என்று கூறி இருக்கிறார்.

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது சில சமயம் எந்த காலை நகர்த்தி விளையாடுவது என்ற குழப்பம் ஏற்படும். அவர் எதிர்கொள்ளும் போது நீங்கள் கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. அஸ்வின் பந்துவீச்சை நீங்கள் சமாளித்து விடலாம் என்று நினைக்கும் போது அவர் வித்தியாசமான முறையில் தன்னுடைய யுத்தியை மாற்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்.
அஸ்வினுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். அதை போல் எனக்கும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவருடைய மூளை எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கும். கிரிக்கெட்டை தவிர அவர் புத்தகங்களை நிறைய படிப்பார். ஆன்லைனில் செஸ் விளையாடுவார்.எப்போதுமே புது விஷயங்களை கற்றுக் கொண்டே இருப்பார்.

எந்த பேட்ஸ்மேன் விளையாடுகிறாரோ, அவரை கூர்மையாக கவனித்து அஸ்வின் அதற்கு ஏற்ப பந்துகளை வீசுவார் இப்படிதான் 2020- 21 ஆஸ்திரேலியா பயணத்தில் ஸ்மித் விக்கெட்டை அவர் தொடர்ந்து வீழ்த்தினார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் அஸ்வின் பேட்டிங்கிலும் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்டில் நானும் அஸ்வினும் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.இந்தியா ஒரு தொடரை விளையாட போகிறது என்றால் அதற்காக அஸ்வின் ஸ்பெஷலாக தயாராகுவார். நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசியே நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம். அவர் நல்ல ஒரு புத்திசாலி. அஸ்வினை விட நான் இரண்டு விளையாட்டில் சிறப்பாக விளையாடுவேன். ஒன்று டேபிள் டென்னிஸ்,மற்றொன்று டென்னிஸ்.
நான் முதல் முதலாக 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று போது தான் அஸ்வினை பார்த்தேன். அப்போது அஸ்வினும் அனிருத் ஸ்ரீகாந்தும் தமிழக அணிக்காக தொடக்க வீரராக விளையாடினார்கள். அஸ்வின் ஒரு நல்ல பேட்ஸ்மேன். அஸ்வின் தற்போது பல சாதனைகளையும் நூறாவது டெஸ்ட் என்ற மைல் கல்லையும் தொட இருக்கிறார். ஆனால் என்னை பொருத்தவரை இது அவருக்கு தாமதமாக தான் கிடைத்திருக்கிறது என்று புஜாரா கூறியுள்ளார்.