இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி ஆஸி! 2வது இன்னிங்சில் அஸ்வின் மிரட்டல்.. 31வது முறையாக 5 விக்கெட்டுகள்
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் தனது பந்துவீச்சில் கலக்கி வருகிறார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல், கோலி, புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அபார ஆட்டம்
எனினும் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 120 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜடேஜா, அக்சர் பட்டேல் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த நிலையில் 321 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் இந்தியா 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

400 ரன்கள்
ஜடேஜா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யாரும் எதிர்பாராத வகையில் முகமது ஷமி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் 84 ரன்கள் சேர்த்து போல்ட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அஸ்வின் அசத்தல்
223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது 2வது இன்னிங்சில் விளையாடியது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் அஸ்வினுடைய பந்துவீச்சு மிகவும் அபாயகரமாக ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஏமனாக விளங்கும் அஸ்வின் தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

5 விக்கெட்கள்
இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் முதல் நிலை வீரரான மார்னஸ் லாபஸ்சேனை 17 ரன்களில் ஜடேஜா தட்டி தூக்கினார். இதே போன்று மாட் ரீன்ஷா , பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஆகியோர் விக்கெட்டை அஸ்வின் பொறி வைத்து பிடித்தார். அலெக்ஸ் கேரி ஸ்விப் செய்து 2 பவுண்டரிகளை அடித்த நிலையில், அவரது விக்கெட்டையும் சாய்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 64 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், அஸ்வின் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.


Click it and Unblock the Notifications