சென்னை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து, இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஓராண்டுக்கு மேலாக டி20 போட்டிகளில் விளையாடாத சுப்மன் கில், நேரடியாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதே சமயம், ஐபிஎல் 2025 தொடரில் ரன் வேட்டை நடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பிரதான அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், தேர்வுக்குழுவின் இந்த முடிவை கடுமையாக சாடியுள்ளார்.
"தேர்வுக்குழுவின் பணி என்பது நன்றி எதிர்பார்க்க முடியாத ஒரு கடினமான பணி என்பதை நான் அறிவேன். ஒரு வீரரை நீக்கும்போது, அவர்களின் முகத்தில் தெரியும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஸ்ரேயாஸ் மற்றும் ஜெய்ஸ்வாலிடம் யாராவது பேசி, அவர்களை நீக்கியதற்கான காரணத்தை விளக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று அஸ்வின் வேதனையுடன் குறிப்பிட்டார்.
சுப்மன் கில் அணிக்கு திரும்பியதை வரவேற்பதாகக் கூறிய அஸ்வின், "நான் சுப்மன் கில் தேர்வானதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அதே சமயம் ஸ்ரேயாஸ் மற்றும் ஜெய்ஸ்வாலுக்காக மிகவும், மிகவும் வருத்தப்படுகிறேன். இது அவர்கள் இருவருக்கும் இழைக்கப்பட்ட அநீதி," என்று காட்டமாகத் தெரிவித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய அஸ்வின், "ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனைகளைப் பாருங்கள். 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்ததோடு, 2014-க்குப் பிறகு முதல் முறையாக அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். அவர் என்ன தவறு செய்தார்?" என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் மூன்றாவது தொடக்க வீரராக இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு, கில்லை கொண்டு வந்ததையும் அஸ்வின் கேள்விக்குட்படுத்தினார். ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 559 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதுதான் பதில் என்றால், ஸ்ரேயாஸ் ஐயரும், ஜெய்ஸ்வாலும் கூடத்தான் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?" என்று அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மொத்தத்தில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை புறக்கணித்துவிட்டு, நீண்ட நாட்களாக டி20 போட்டிகளில் ஆடாத ஒருவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்திருப்பது, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறைகள் மீது மீண்டும் ஒருமுறை கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அஸ்வினின் இந்தக் கருத்துகள், இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.