நீ இல்லமா உலககோப்பை அணியா? அவரிடம் பேசி விளையாட வைப்பேன்.. அஸ்வின் சூளுரை
மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் 2024 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு புவனேஷ்வரின் அனுபவம் மிகவும் தேவைப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின் "புவனேஷ்வர் குமார் உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும். அவருடன் நான் பேசுவேன். அவரை முதல்தர கிரிக்கெட், விஜய் ஹசாரே கோப்பை என அனைத்து உள்நாட்டு தொடர்களிலும் விளையாட ஊக்குவிப்பேன். அதன் மூலம் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு அவரை முழுமையாக தயார்படுத்தலாம். அங்கு அவரது அனுபவம் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

ஜனவரி 2013 இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான புவனேஷ்வர் குமார், இதுவரை இந்தியாவிற்காக 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அவர் ஜனவரி 21, 2022 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய போட்டிற்குப் பிறகு, இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
அவர் 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் அவரால் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான புவனேஸ்வர் குமார், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தள்ளி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கும் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராக உருவெடுத்த அவர், ஆர்சிபி அணி தனது ஐபிஎல் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிரான வெள்ளை-பந்து தொடர்களுக்கான இந்திய அணியில் தேர்வுக்குழுவினர் அவரை பரிசீலிக்கவில்லை.


Click it and Unblock the Notifications

