மும்பை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
புவனேஷ்வர் நகரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த தொடரில் திரைப்பட நடிகர் வேதாந்த் கலந்துக்கொண்டு அடுத்தடுத்து முன்னேறியுள்ளார்.
பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா சார்பில் களமிறங்கிய வேதாந்த் மாதவன், பந்தய தூரத்தை 16:01.73 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அத்வைத் என்ற வீரர் 16:06.43 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது வேதாந்த் அந்த சாதனையை முறியடித்துள்ளார். இவர் வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் மாதவன், "எப்போதும் முடியாது என்றும் மட்டும் கூறிவிடாதீர்கள்" என புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். மகனின் விருப்பம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த மாதவன், சினிமாவில் வர ஆசையுள்ளதா என்று கேட்டபோதும், வேதாந்த் நீச்சலை மட்டுமே தேர்வு செய்ததாக பெருமையுடன் கூறினார்.