இங்கிலாந்தில் மிரள விட்ட தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர்.. 18 ஓவரில் 12 மெய்டன், 5 விக்கெட்
பிரிஸ்டல்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில், குளுசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய தமிழக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர், டெர்பிஷைர் அணிக்கு எதிராக வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வரும் நிலையில் சாய் கிஷோர் தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி தொடரில் பல போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், 319 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய டெர்பிஷைர் அணியை சாய் கிஷோர் தனது சுழற்பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். மொத்தம் 18 ஓவர்கள் வீசிய அவர், அதில் 12 ஓவர்களை மெய்டனாக மாற்றி, எதிரணியின் 5 முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி மிரட்டினார்.

சாய் கிஷோரின் இந்த துல்லியமான பந்துவீச்சால் டெர்பிஷைர் அணி 38.3 ஓவர்களில் வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. குளுசெஸ்டர்ஷைர் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 213 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சாய் கிஷோர், இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 79 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக தொடர்ந்து மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் கிஷோருக்கு, இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது இங்கிலாந்து மண்ணிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளதால், பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தை அவர் மீண்டும் ஈர்த்துள்ளார்.
அனைத்து விதமான ஆடுகளங்களிலும் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்ட சாய் கிஷோர் இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட கால சுழற்பந்து வீச்சாளராக செயல்பட சிறந்த தேர்வாக இருப்பார். மேலும், அவர் பேட்டிங்கிலும் ஓரளவு ரன் சேர்ப்பார். பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சாய் கிஷோரை கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

