சூர்யகுமாரை சரிசெய்ய என்னதான் வழி.. 3வது ஒருநாள் போட்டியில் ஜொலிப்பாரா??.. ராகுல் டிராவிட் விளக்கம்!
மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் அவரின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

சூர்யகுமாரின் ஃபார்ம்
இந்திய அணியை பொறுத்தவரையில் ப்ளேயிங் 11 பலமாக தான் உள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவின் நிலைமை தான் கவலையளித்து வருகிறது. உலகின் நம்.1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 1,675 ரன்களை குவித்துள்ளார். அதுவும் 175 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3 சதங்களை அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை. சராசரியாக 25 ரன்களை மட்டுமே அடிக்கிறார். அதுவும் ஆஸ்திரேலியாவுடனான முதல் 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகியுள்ளார்.

டிராவிட் விளக்கம்
இந்நிலையில் சூர்யகுமாரின் நிலைமை குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அதில், துரதிஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இந்தியாவுக்காக நீண்ட நாட்களாக அவர் தான் 4வது விக்கெட்டில் விளையாடி வந்தார். இந்திய அணியை பொறுத்தவரை ஒரு இடத்திற்கு ஒரே ஒரு வீரரை நியமித்துவிடுவது வழக்கமாக உள்ளது. காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்கள் உள்ளனர், ஆனால் பெரும்பாலான வாய்ப்புகள் ஒருவருக்கு தான் கிடைக்கிறது.

2 வருடங்கள் பிரச்சினை
கடந்த 2 வருடங்களாக நிறைய டி20 போட்டிகள் மட்டுமே நடந்துவந்தன. ஒருநாள் கிரிக்கெட் பெரியளவில் நடக்கவில்லை. எனவே சூர்யகுமாரை பற்றி கவலை இல்லை. முதல் 2 போட்டிகளிலும் தவறான ஷாட்டால் அவுட்டாகவில்லை. மிகச்சிறப்பான பந்துவீச்சில் அவுட்டானார். சூர்யகுமாருக்கு நிறைய டி20 அனுபவம் தான் உள்ளது. ஏனென்றால் 10 வருடங்களாக ஐபிஎல் ஆடியுள்ளார், இந்தியாவுக்காகவும் டி20 தான் ஆடியுள்ளார். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட் சற்று வித்தியாசமானது.

அதிக வாய்ப்புகள்
எனவே சூர்யகுமார் யாதவுக்கு முடிந்தவரை நிறைய வாய்ப்புகளையும், கால அவகாசத்தையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் அனைத்து விதமான சிரமங்களையும் அவர் தெரிந்துக்கொண்டு 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு வருவார் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இன்று நடைபெறும் 3வது போட்டியில் சூர்யகுமார் நிச்சயம் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications