2023 உலகக்கோப்பை பைனலில் 15 முறை நடந்த ஒரே சம்பவம்.. எஸ்கேப் ஆன ட்ராவிஸ் ஹெட்.. மனம் திறந்த டிராவிட்
மும்பை: 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டியில் ட்ராவிஸ் ஹெட்டை 15 முறை வீழ்த்தி இருக்க முடியும் என அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் கூறி இருக்கிறார்.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் தூணாக நின்று இலக்கை எட்ட உதவினார். 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அவரது விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தி இருந்தால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்று இருக்கலாம். தற்போது அது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 15 முறை ட்ராவிஸ் ஹெட் பேட்டை தாண்டி பந்து சென்ற போதும் அவர் ஒரு முறை கூட எல்பிடபுள்யூ அல்லது பவுல்டு அவுட் ஆகவில்லை எனவும், இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை எனவும் கூறினார்.
"எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாங்கள் 15 முறை டிராவிஸ் ஹெட்டின் பேட்டை தாண்டி பந்தை வீசினோம். அவரால் அந்த 15 பந்துகளையும் தொட முடியவில்லை. சில சமயம் நம்மை மீறி சில விஷயங்கள் நடக்கும். இருந்தாலும் நாம் நமது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அது குறித்து நான் சிந்தித்துப் பார்க்க நேரம் இருந்தது. சில சமயம் நாம் இது போன்ற பல விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். நமது செயல்முறையை விடாமல் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நாம் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தது நடக்கும்." என்றார் ராகுல் டிராவிட்.
"சில சமயம் நமக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். சில சமயம் திறமை இருந்தாலும் ஒரு இன்ச்க்கு முன்னே உங்களது கால்கள் இருக்க வேண்டும்." இவ்வாறு கூறினார் ராகுல் டிராவிட். 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி எல்லை அருகே பிடித்த கேட்ச்சைத் தான் "கால்கள் ஒரு இன்ச் உள்ளே இருக்க வேண்டும்" என ராகுல் டிராவிட் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications