இந்திய அணியில் நுழைந்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன்.. அண்டர்-19 அணியில் அன்வேவுக்கு வாய்ப்பு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அண்டர்-19 அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அண்டர்-19 அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணிகளை பிசிசிஐ-யின் ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி வியாழக்கிழமை அன்று அறிவித்தது.
இந்த இரு பிரிவுகளுக்கும் யாஷ்பர்தன் சிங் சவுகான் கேப்டனாகவும், லக்ஷ்யா ராய்சந்தானி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 17 வயதான அன்வே டிராவிட், ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் ரஜத் பாகேலும் மற்றொரு விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்தல்
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அன்வே டிராவிட், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த வினூ மன்கட் கோப்பை தொடரில் கர்நாடக அண்டர்-19 அணியை கேப்டனாக வழிநடத்தி காலிறுதி வரை அழைத்துச் சென்றார். அந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் குவித்தார். இதில் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
மேலும், பெங்களூருவில் நடந்த முத்தரப்பு தொடருக்கான இந்திய அண்டர்-19 பி அணியிலும், சேலஞ்சர் கோப்பைக்கான சி அணியிலும் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவர் அந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். தற்போது அவரது தம்பி அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் நுழைந்துள்ளார்.
இந்திய அண்டர்-19 ஒருநாள் அணி: சாகர் விர்க், லக்ஷ்யா ராய்சந்தானி (துணை கேப்டன்), யாஷ்பர்தன் சிங் சவுகான் (கேப்டன்), வினீத் வி கே, அர்ஜுன் ராஜ்புத், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல், அன்வே டிராவிட், அன்மோல்ஜீத் சிங், உத்குரி யஷ்வீர் கவுட், ரோஹித் அனில் யாதவ், ஷாவின் வி, காவ்யா பரேஷ் படேல், மோஹித் உல்வா, இஷான் சூட்.


Click it and Unblock the Notifications
