பெங்களூரு: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் வினோ மன்கட் தொடருக்கான கர்நாடகா யு19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் களமிறங்கும் வீரர் தான் ஒவ்வொரு அணிக்கும் மிக முக்கியமான வீரர். கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் தான் களமிறங்கினார். ஆனால் வாழ்நாள் முழுவதும் 3வது இடத்தில் களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணியை அரணாக நின்று காத்தவர் ராகுல் டிராவிட்.

164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13288 ரன்கள், 344 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,889 ரன்களை விளாசியவர் ராகுல் டிராவிட். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்விபெற்ற பின் என்சிஏ தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய யு19 அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரின் பயிற்சியின் கீழ் செயல்பட்ட சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் தான் இந்திய அணியின் நட்சத்திரங்களாக உள்ளனர்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசியக் கோப்பையை வென்றுவிட்டு, அடுத்ததாக உலகக்கோப்பையை வெல்ல தயாராகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் அமைதியாக இன்னொரு சம்பவத்தையும் செய்துள்ளார். அதாவது ராகுல் டிராவிட் தனது வீட்டில் இருந்தே இன்னொரு வீரரை கிரிக்கெட்டில் களமிறக்கியுள்ளார். அவருக்கு சமித் மற்றும் அன்வய் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள இவர்கள் இருவரும், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் ராகுல் டிராவிட்டின் இளைய மகனான அன்வய் டிராவிட் அண்மையில் கர்நாடகா யு14 அணியின் கேப்டனாக செயல்பட்டார். தென் மண்டல அணிகளுக்கு இடையிலான இண்டர் சோனல் கிரிக்கெட் தொடரில் அன்வய் தலைமையில் கர்நாடகா யு14 அணி களமிறங்கியுள்ளது. தற்போது மூத்த மகனான சமித் டிராவிட் வினோ மன்கட் டிராபிக்காக 15 பேர் கொண்ட கர்நாடகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்.12 முதல் 20ஆம் தேதி வரை கர்நாடகாவில் வினோ மன்கட் டிராபி நடக்கவுள்ளது. இதில் கர்நாடகா அணியின் யு19 அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் உச்சியில் இருந்த ராகுல் டிராவிட் தனது மகன்கள் இருவரையும் கிரிக்கெட்டில் ஈடுபடுத்தி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.