
ஏமாந்த ரோஹித்
தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நேர்த்தியாக விளையாடினர். இடையில் 2 ரிவ்யூக்கள் இங்கிலாந்து எடுத்தாலும், அதனால் பலனில்லாமல் போனது. இதனால் ரோஹித் - ராகுல் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து வெற்றிகரமாக பயணித்தது. தொடர்ந்து சில பந்துகளை இந்த ஜோடி பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. இதனால், ஸ்கோர் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. மதிய உணவுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், ஓலே ராபின்சன் வீசிய புல் ஷாட்டில் தூக்கி அடித்த ரோஹித், 36 ரன்களில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால் இந்த பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருக்கலாம்.

சொடக்கு போடும் நேரத்தில்
ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் நிலைமை மோசமாகிவிட்டது. ஒன் டவுன் இறங்கிய புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இவர்களை இருவரையும் பேக் டூ பேக் வீட்டுக்கு அனுப்பியது ஆண்டர்சன் தான். புஜாரா பேட்டில் உரசிச் சென்ற பந்து, விக்கெட் கீப்பர் பட்லர் கைகளில் அழகாக தஞ்சமடைய, அடுத்த பந்தே, கோலி பேட்டை மீண்டும் உரசிய பந்து, மீண்டும் விக்கெட் பட்லர் கைகளுக்கு சென்றது. இரண்டும் எவ்வளவு பெரிய விக்கெட். அணியின் முதுகெலும்பு விக்கெட்ஸ். ஆனால், சொடக்கு போடும் நேரத்தில் இழந்தது இந்தியா.

4வது விக்கெட்
இதற்கு பிறகு அந்தந்த சம்பவம் வேற ரகம். ராபின்சன் ஓவரில், லோகேஷ் ராகுல் பந்தை ஸ்ட்ரைக்கில் நின்று சந்தித்து, லைட்டாக கவர் பாயிண்ட்டில் தட்டிவிட்டு ரன் ஓட ஒரேயொரு அடி எடுத்து வைத்தார். அதற்குள் ரன்னர் எண்டில் இருந்து சிட்டாய் பறந்த ரஹானே நான்கைந்து ஸ்டெப்புகள் முன்னே சென்றுவிட்டார். ராகுல் உடனே வேண்டாம் என்று கதற, ரஹானே மீண்டும் கிரீஸ் திரும்புவதற்குள், பேர்ஸ்டோ பந்தை துல்லியமாக ஸ்டெம்ப்பை நோக்கி வீச "Direct Hit". ரஹானே காலி. இந்தியா 4வது விக்கெட்டை இழந்தது. இதன் பிறகு அடுத்த விக்கெட்டையும் இந்தியா இழந்திருக்க வேண்டியது. ஆம்! ஆண்டர்சன் ஓவரில் 52 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் ஸ்லிப்பில் கொடுத்த அற்புதமான கேட்சை டாம் சிப்லே தவறவிட்டார். அதை மட்டும் பிடித்திருந்தால், 5வது விக்கெட்டும் காலியாகியிருக்கும். இப்போது இந்திய அணி மிடில் ஆர்டரை முற்றிலும் இழந்துவிட்டது. அப்படி இப்படி என தாக்குப்பிடித்து ஆடினாலும், 250 ரன்கள் தாண்டினாலே அது பெரிய சாதனையாக அமையும்.

மீண்டும் போட்டி தடை
இந்நிலையில், 46வது ஓவர் வீசப்பட்ட போது, ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து மழை நின்று, மீண்டும் ஆட்டம் துவங்கப்பட்டு 2 பந்துகளே வீசப்பட்ட நிலையில், மீண்டும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை விடாமல் பெய்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 46.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை (ஆக.6) பிற்பகல் 3:30 மணிக்கு மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications