சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் ஆளுமை, அவரின் பேட்டிங், கள நடவடிக்கை, அவரிடம் உள்ள எனர்ஜி என்று அத்தனையையும் விரும்புவதாக ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியை வென்றால் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதோடு, புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முக்கிய வீரர்களான தீக்சனா மற்றும் பதிரானா இருவரும் சென்னை அணியில் இணைந்துள்ளனர்.

அதேபோல் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். அதுமட்டுமல்லாமல் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், அஸ்வின், சாஹல், ஹெட்மயர், போல்ட் என்று ஒரு படையே சென்னை அணியை வீழ்த்த காத்திருக்கிறது. சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து வீழ்த்தும் போது கிடைக்கும் எனர்ஜி அபரிவிதமானது. அது அத்தனை எளிதல்ல. அந்த புத்துணர்ச்சியை பெற ராஜஸ்தான் அணி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வரை முயற்சிக்கும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்தும், சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்தும் ராஜஸ்தான் அணி வீரர்கள் பேசிய அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் பேசுகையில், எம்எஸ் தோனி விளையாடுவதை பார்ப்பது எப்போதும் பிடிக்கும். தோனி தனது அணியை வழிநடத்தும் விதம், அவரின் ஆளுமை, அவரிடம் உள்ள எனர்ஜி என அத்தனையும் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், எம்எஸ் தோனியின் மிகத்தீவிர ரசிகர். 2019 உலகக்கோப்பையின் போது தோனி குறித்து பட்லர் பேசுகையில், எம்எஸ் தோனி சாதித்தவற்றில் பாதியளவு சாதித்தால் கூட என் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைவடைந்துவிடுவேன் என்று கூறியவர். அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு நேராக தோனியை நோக்கி வந்த பட்லர், தோனியின் ஜெர்சியில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். அந்த புகைப்படத்தையும் பட்லர் ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.