RR vs DC: சொதப்பல் பேட்டிங்... அணியின் மானம் காத்த பராக்... டெல்லிக்கு வெற்றி இலக்கு 116
டெல்லி:டெல்லி அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 53வது போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட டெல்லி அணியும், வாழ்வா? சாவா? என போராடி கொண்டு இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று டெல்லி முடிவெடுத்திருக்கிறது.
ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரகானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் ஆடுகின்றனர். டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்கமே விக்கெட்
துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினர். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து ரகானே வெளியேறினார். அவர் தொடங்கி வைத்த விக்கெட் வீழ்ச்சி அடுத்தடுத்து தொடர்ந்தது. லிவிங்ஸ்டன் 14 ரன்களில் அவுட்டானார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

6 ஓவர்களுக்குள் விக்கெட்டுகள்
லோம்ரர் 8 ரன்களில் வீழ்ந்தார். 6 ஓவர்கள் முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால், பராக் ஆகிய இருவரும் கைகோர்த்தனர். இந்த ஜோடியும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. கோபால் 12 ரன்களுடன் பை சொல்லி நடையை கட்டினார்.

வந்த வேகத்தில் அவுட்
அடுத்து வந்த பின்னியும் சந்தித்த முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ராஜஸ்தான் அணியில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இளம் வீரர் பராக் மட்டும் களத்தில் நின்றார். அவருக்கு ஆதரவாக யாரும் நிலைக்க வில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது.

பராக் 50 ரன்கள்
100 ரன்களை கூட எட்டுமா என்று ரசிகர்கள் நம்பாமல் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பராக் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியில் 3 பேரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருப்பது, குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications