RR vs DC: நட்சத்திர பவுலர் ஸ்டார்க்கை இறக்கிய DC.. ராஜஸ்தான் - டெல்லி பிளேயிங் 11 என்ன?
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெறும் 43வது லீக் போட்டியில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதால், இந்த ஆட்டத்தில் களத்தில் அனல் பறக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், வழக்கமான ஜெய்ப்பூர் ஆடுகளத்தை விட இன்று பிட்ச் சற்று வறண்டு காணப்படுகிறது, ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளத்தின் வேகம் குறையும் என எதிர்பார்க்கிறோம், அதனால் தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளோம் என விளக்கமளித்தார். கடந்த போட்டியில் 228 ரன்களை வெற்றிகரமாக விரட்டியது அணி வீரர்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் மீண்டும் திரும்பியுள்ளார். தசுன் சனகா இம்பேக்ட் வீரராக அமரவைக்கப்பட்டு, துபே களமிறங்குகிறார். ஜெய்ப்பூர் மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 60 சதவீத வெற்றியை ராஜஸ்தான் பதிவு செய்திருந்தாலும், 2025ம் ஆண்டிற்கு பிறகு இங்கு ஆடிய 6 போட்டிகளில் 1ல் மட்டுமே வென்றுள்ளது அந்த அணிக்கு சற்று சவாலான விஷயமாகும்.
மறுபுறம் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியில் இன்று 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை காயம் காரணமாக ஆடாமல் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளதால் துஷ்மந்தா சமீரா வெளியேறியுள்ளார். காயம் காரணமாக சாஹில் விலகியுள்ளார், இதனால் பதும் நிசங்கா தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் இடம்பெற வேண்டும் என்ற விதியால் அதிரடி வீரர் டேவிட் மில்லர் இன்று விளையாடவில்லை, அவருக்கு பதிலாக அசுதோஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். உடல் மொழியிலும், தற்போதைய சூழ்நிலையிலும் முழு கவனம் செலுத்தி விளையாடுவது அவசியம் என அக்சர் படேல் வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் லெவன் (Playing XI):
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசங்கா, நிதிஷ் ரானா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் ஷர்மா, கைல் ஜேமிசன், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டி. நடராஜன்.
டெல்லி கேபிடல்ஸ்
இம்பாக்ட் வீரர்கள்: டேவிட் மில்லர், விப்ராஜ் நிகம், கருண் நாயர், அபிஷேக் போரல், ஆக்கிப் நபி தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடும் லெவன் (Playing XI):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டொனோவன் ஃபெரேரா, ரவீந்திர ஜடேஜா, சுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா.
இம்பாக்ட் வீரர்கள்: ஆடம் மில்னே, தசுன் ஷனாகா, ரவி சிங், யாஷ் ராஜ் புஞ்சா, துஷார் தேஷ்பாண்டே
மைதானத்தின் தன்மையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படுகிறது. ஆடுகளம் கான்கிரீட் போல மிக கடினமாகவும், சற்று புற்களுடனும் உள்ளதால் இது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக அமையும் என வர்ணனையாளர்கள் கணித்துள்ளனர். மைதானத்தின் ஒருபுறம் பவுண்டரி தூரம் 63 மீட்டராகவும், மறுபுறம் 69 மீட்டராகவும், நேராக 76 மீட்டராகவும் உள்ளது. அவுட்பீல்ட் மிக வேகமாக உள்ளதால் இன்று மைதானத்தில் பவுண்டரிகள் பறப்பது உறுதி.
குறிப்பாக, ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் டெல்லி அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடையேயான பலப்பரீட்சையை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 9 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கும், 8 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தவிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications